கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.அருண், பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, ‘‘பெங்களூரு கன்டோன்மென்ட் பகுதியில் ஆங்கிலேயர் ஆட்சி செய்தபோது, தமிழர்கள் அவர்களுக்கு அடிமையாக இருந்தனர். ஆனால், கன்னடர்கள் ஒருபோதும் அடிமைகளாக இருந்ததில்லை. இங்கு வாழும் அனைவரும் கன்னடம் கற்றுக் கொண்டு கன்னடத்தில் பேசவேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளது அங்கு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவரது பேச்சுக்கு எதிராக தாய்மொழி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டி.குமார், ‘‘நீதிபதிகள் சாதி,மதம், மொழிக்கு அப்பாற்பட்டு சிந்திக்க வேண்டும். கன்டோன்மென்ட் பகுதியில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடியவர்களில் பெரும்பான்மையோர் தமிழர்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளார். அங்கு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்ற தியாகி ஞானமணியின் மகன் மகிமைதாஸ் போன்றோரும் நீதிபதியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து தியாகிகளின் பெயர் பட்டியலை குறிப்பிட்டுள்ளனர்.
கர்நாடகாவில் வாழும் மக்கள் கன்னடத்தில் பேச வேண்டும் என்று வேண்டுகோள் வைப்பது நீதிபதியின் உரிமை. அதே நேரம் தமிழர்களை அவமானப்படுத்தும் வகையில் கருத்து தெரிவிப்பதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நீதிபதிகள் சாதி, மதம், மொழிக்கு அப்பாற்பட்டு சிந்திக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள கருத்து, நீதிபதிகள் மட்டுமின்றி, நாட்டில் உயர் பொறுப்பில் அமர்ந்துள்ள அனைவருக்கும் பொருந்தும். தமிழர்களுக்கும் கன்னட மக்களுக்கும் இடையே பல்வேறு சூழ்நிலைகளால் வெறுப்புணர்வு விதைக்கப்பட்டு, பல கலவரங்களை பார்த்தாகிவிட்டது. அத்தகைய கசப்பான உணர்வுகளை மறந்துவிட்டு, சமீபத்தில் தமிழர் – கன்னடர் ஒற்றுமை மாநாடு நடந்து, இருதரப்பினரும் இணக்கமாக நட்புறவு பாராட்டிவரும் இன்றைய காலகட்டத்தில், உயர் நீதிமன்ற நீதிபதி பதவியில் இருப்பவரின் பேச்சு ஏற்க முடியாத ஒன்றாகவே அமைந்துள்ளது.