சென்னையில் ஆண்டுதோறும் 100 செமீக்கும் அதிகமாக மழை கிடைத்தாலும், அது நிலத்தடிநீராக மாறுவதில்லை. இதனால் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட அடுத்த ஆண்டே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. மழைநீரை நிலத்தடி நீராக மாற்றுவதில் மாநகராட்சி நிர்வாகம் அக்கறை காட்டுவதில்லை என பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. எனவே, கிடைக்கும் மழைநீரை குளங்களுக்கு கொண்டு சென்று நிலத்தடிநீராக செறிவூட்ட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக வட சென்னை, கொடுங்கையூரில், 34-வது வார்டு, யூனியன் கார்பைடு காலனியை சேர்ந்த, எவரெடி நகர் மக்கள் பொதுநலச்சங்க செயலாளர் எஸ்.முருகப்பன் கூறியதாவது: கடந்த அக்டோபர் 15-ம் தேதி பெய்த ஒரு நாள் மழைக்கே எங்கள் பகுதியில் பல தெருக்களில் மழைநீர் சூழ்ந்து, வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து 1 அடி உயரத்துக்கு தேங்கியது. இதனால் அப்பகுதியில் குடியிருப்போர் வீடுகளை விட்டு வெளியேறி, மழைநீர் வடிந்த பிறகே, வீடுகளுக்கு திரும்பினர்.