சென்னை: மூட்டு வாத பாதிப்புகளுக்கு அரோமா தெரபி எனப்படும் நறுமண சிகிச்சை அளிப்பதன் மூலம் நல்ல தீர்வு கிடைப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பான ஆராய்ச்சியை யோகா இயற்கை மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் டாக்டர் எஸ்.மாதேஷ், டாக்டர் ஒய்.தீபா, ஏ.மூவேந்தன், என்.மணவாளன் ஆகியோர் முன்னெடுத்தனர். அதன் முடிவுகளின் அடிப்படையில் ஆராய்ச்சி கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ஆஸ்டியோ ஆர்தரைடிஸ் எனப்படும் மூட்டு அழற்சி பாதிப்பானது பரவலாக இருக்கக் கூடிய ஒன்று. உலகம் முழுவதும் 25 கோடி பேர் அதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. குருத்தெலும்பு, மூட்டு இணைப்பு எலும்புகளில் ஏற்படும் நாள்பட்ட தேய்மானம் மற்றும் உராய்வுகளால் இப்பிரச்னை ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் நடமாட முடியாலும், இயல்பாக செயல்பட முடியாமலும் முடக்கி விடக்கூடிய நோயாக இது உள்ளது.
பொதுவாக தலைவலி, உடல் வலி, சோர்வு, பதற்றம், தூக்க குறைபாடுகளுக்கு நறுமண சிகிச்சைகள் நல்ல பலனளிக்கின்றன. பூக்கள், தாவரங்கள், மூலிகைகள், வேர்கள், இலைகளின் சாரத்தை தனியாக பிரித்தெடுத்து நறுமண எண்ணெய்கள் தயாரிக்கப்படுகின்றன. லெமன்கிராஸ் எனப்படும் எலுமிச்சை புல்லும், கெமோமில் எனப்படும் சாமந்தி வகை பூக்களும் இயற்கையாகவே அதீத மருத்துவ குணம் கொண்டவை. அவற்றின் சாரத்துடன் தேங்காய் எண்ணெயை கலந்து தனித்துவமான நறுமண எண்ணெய் தயாரித்து அதனை மூட்டு அழற்சி நோயாளிகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி யோகா இயற்கை மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளில் 80 பேருக்கு அத்தகைய சிகிச்சை வழங்க திட்டமிடப்பட்டது. அவர்களில் 50 பேர் சிகிச்சைக்கு தகுதியானவர்களாக இருந்தனர். 40 முதல் 60 வயது வரையிலான 38 பெண்களும், 12 ஆண்களும் ஆய்வுக்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு எலுமிச்சை புல் மற்றும் சாமந்தி பூ வகை எண்ணெய் தலா 3 மி.லி.யுடன் தேங்காய் எண்ணெய் 15 மி.லி. சேர்த்து ஒவ்வொரு கால் மூட்டிலும் தலா 10 நிமிஷம் வீதம் 10 நாட்களுக்கு நறுமண எண்ணெய் மசாஜ் செய்யப்பட்டது. அதன் பயனாக அவர்களது உடல் எடை நிறை (பிஎம்ஐ) குறைந்தது ஆய்வில் கண்டறியப்பட்டது. தொடர்ச்சியாக மூட்டு அழற்சியால் ஏற்பட்ட வலியும் குறைந்தது தெரியவந்தது. இதனை மேலும் நுட்பமாக அறிந்துகொள்ள கூடுதல் நோயாளிகளைக் கொண்டு விரிவான ஆய்வை மேற்கொள்வது அவசியம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post மூட்டு வாத பாதிப்புக்கு நறுமண சிகிச்சை: யோகா இயற்கை மருத்துவ கல்லூரி தகவல் appeared first on Dinakaran.