புதுடெல்லி: ரஷ்ய – உக்ரைன் போர் 1,000 நாட்களை எட்டும் நிலையிலும், தீவிரமாக யுத்தம் நடைபெற்று வருகிறது. ‘இந்தப் போரில் இதுவரை 2,406 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது, 659 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்; 1,747 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்’ என யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது.
நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக் கூடாது என்பதற்காக, ரஷ்யா கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது கண்மூடித் தனமாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதி மற்றும் ஆயுத உதவி அளித்து வருவதால், உக்ரைனும், ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்தப் போர் இரண்டு ஆண்டுகளை கடந்திருக்கும் நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக சில நாடுகளும், ரஷ்யாவுக்கு ஆதரவாக சில நாடுகளும் செயல்பட்டு வருகின்றன. ஐ.நா. பொதுச் செயலாளர் தொடங்கி உலக நாடுகள் வரை பலரும் இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தன. ஆனால், ரஷ்யா அதையெல்லாம் காதில்கூட போட்டுக் கொள்ளாமல் தாக்குதல் நடத்தி வந்தது.