
இந்திய தேசிய விடுதலைப் போராட்ட வீரரரும், காந்தியின் நெருக்கமான நண்பர் மட்டுமல்ல, அவரது சம்பந்தியாகவும் விளங்கியவர் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் (பழைய சேலம் மாவட்டத்தின்) ஓசூருக்கு அருகில் உள்ள தொரப்பள்ளி கிராமத்தில் பிறந்தார். அவரது தந்தை சக்கரவர்த்தி வெங்கடார்யா, தாயார் சிங்காரம்மா ஆவர்.
பெங்களூர் சென்ட்ரல் கல்லூரி, மற்றும் சென்னை மாகாணக் கல்லூரியில் கல்வி பயின்றார். 1900-ம் ஆண்டில் ஒரு வழக்குக்கே 1000 ரூபாய் வாங்கும் வெற்றிகரமான வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார். சிறந்த எழுத்தாளரும் கூட. காங்கிரஸ் கட்சியின் தலைவர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளை வகித்தவர்.
காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு, வழக்கறிஞர் தொழிலை கைவிட்டார். விடுதலைப் போராட்ட இயக்கத்தில் இணைந்தார். ரவுலட் சட்டத்துக்கு எதிரான போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களில் பங்கேற்றார். 1917-ல் சேலம் நகராட்சி உறுப்பினராகவும், பின்னர் நகராட்சித் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

