ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளன் விடுதலை- சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு தேர்தல் பிரசாரம் செய்ய வந்தபோது ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலை படை மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார்.

இதையடுத்து பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்டனர்.

முருகன், நளினி, பேரறிவாளன் உள்பட 7 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. முதலில் இவர்கள் 7 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.

இந்த நிலையில் 7 பேரையும் விடுதலை செய்யக் கோரி ஜெயலலிதா ஆட்சி காலத்திலேயே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் மத்திய அரசு அனுமதிக்காததால் முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெறவில்லை.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், தனது தண்டனையை நிறுத்தி வைக்கவும், விடுதலை செய்யக் கோரியும் சுப்ரீம கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் அமர்வில் நடந்து வந்தது.

வழக்கு விசாரணையின்போது, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை கடந்த 2018-ல் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது. ஆனால் அந்த தீர்மானம் மீது தமிழக கவர்னர் நீண்ட காலமாக எந்த முடிவும் எடுக்காமல் கிடப்பில் வைத்துள்ளார். இது வருத்தம் அளிப்பதாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும் கவர்னர் மாநில அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவரே. அவர் தனித்த கண்ணோட்டத்துடன் செயல்பட முடியாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு தரப்பில் மேற்கொண்டு எந்தவொரு சட்டப்பூர்வ வாதங்களையும் முன்வைப்பதற்கு இல்லை என்றால் பேரறிவாளனை விடுவிக்கும் விஷயத்தில் நாங்களே முடிவு எடுப்போம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

கடந்த வாரம் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்த நீதிபதிகள் இறுதி வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய மத்திய அரசுக்கும், மனுதாரர் தரப்புக்கும் உத்தரவிட்டனர்.

அதன்படி மத்திய அரசு தாக்கல் செய்த எழுத்துப்பூர்வமான வாதத்தில் இந்த வழக்கை விசாரித்தது மத்திய அரசின் புலனாய்வு அமைப்பு என்பதால் மத்திய அரசுக்குத்தான் முழு அதிகாரமும் உள்ளது. கவர்னர் இது தொடர்பாக பரிந்துரை செய்துள்ளதால் தற்போது ஜனாதிபதி மட்டுமே முடிவு எடுக்க முடியும் என கோரப்பட்டிருந்தது.

பேரறிவாளன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்துப்பூர்வ வாதத்தில், ‘தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய முடிவை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பி வைத்தது அரசியல் சாசனத்துக்கு முரணானது. எனவே சுப்ரீம் கோர்ட்டு தனக்குரிய பிரத்யேக அதிகாரமான 142ஐ பயன்படுத்தி, பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று காலை தீர்ப்பளித்தது.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

பேரறிவாளன் விடுதலை விஷயத்தில் கவர்னர் தாமதம் செய்தது தவறாகும். எனவே 142வது சட்டப்பிரிவை பயன்படுத்தி பேரறிவாளன் விடுதலை செய்யப்படுகிறார். 161-வது சட்டப்பிரிவின் கீழ் மாநில அரசுக்கு சில அதிகாரங்கள் உள்ளன. அவை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். எனவே எங்களது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்கிறோம்.

இவ்வாறு சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் பரபரப்பு தீர்ப்பை வெளியிட்டனர்.

ராஜீவ் கொலை கைதிகள் வழக்கில் 30 ஆண்டுகளுக்கு பிறகு மிக முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு இன்று வழங்கி உள்ளது. தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு வெற்றி கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மத்திய அரசின் நிலைப்பாட்டையோ, தமிழக கவர்னரின் அதிகார வரம்பையோ கருத்தில் கொள்ளாமல் தங்களது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை விடுவித்து இருக்கிறார்கள். இது மத்திய அரசுக்கு மிகுந்த பின்னடைவாகும்.

ராஜீவ் கொலை கைதிகளை மத்தியில் ஆண்ட காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா அரசுகள் தொடர்ந்து மறுத்து வந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு இன்று அந்த அதிரடியை நிகழ்த்தி உள்ளது. எனவே சுப்ரீம்கோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

என்றாலும் சட்ட நுணுக்கங்களின் அடிப்படையில் சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் குழு தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கி உள்ளது. ஆகையால் பேரறிவாளனை தொடர்ந்து தற்போது சிறைதண்டனை அனுபவித்து வரும் முருகன், நளினி உள்ளிட்ட 6 பேரும் பேரறிவாளன் வழியில் சுப்ரீம்கோர்ட்டை அணுக வழிவகை ஏற்பட்டு உள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *