சென்னை: புயல் காரணமாக அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 2,229 நிவாரண மைய கட்டிடங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அந்த மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர் என்று மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் மேற்கொண்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் கனமழையை எதிர்கொள்ள தேவையான அனைத்து ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், நிலைமையை தொடர்ந்து கண்காணிக்கவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இன்று (நவ.29) காலை மாநில அவசரகால செயல்பாட்டு மையத்துக்கு வந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.