சென்னை: தமிழகத்தில் மதுரையில் நேற்று 106 டிகிரி வெயில் கொளுத்தியது. 4 மாவட்டங்களில் 102 டிகிரி வெயில் நிலவியது. இதையடுத்து, மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் நாளை முதல் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.அதனால் 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் கிழக்கில் நேற்று மழை பெய்துள்ளது. சேலம் மாவட்டம் கொல்லி மலை வட்டத்தில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. கடலூர், உளுந்தூர்பேட்டை, வேப்பூர், விருதாசலம், ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாதோப்பு, பரங்கிப்பேட்டை, மயிலாடுதுறை,சீர்காழி, காட்டுமன்னார்குடி, உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மழை தொடங்கியுள்ளது.
இந்நிலையில் சிவகங்கை, புதுக்கோட்டை, டெல்டாவிலும் நேற்று மாலையில் மழை தொடங்கியது. திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று இரவில் மழை பெய்தது. கேரளாவிலும், கர்நாடகாவிலும் நல்ல மழை பெய்துள்ளது.
இந்த மழை நேற்று இரவு 9 மணிக்கு பிறகு நின்றது. காற்று வேகமாக வீசியது. காலையில் இருந்தே காற்று வீசியதால் வெப்ப சலன மழை மட்டுமே பெய்தது. மெல்ல நகரும் காற்றாக இருந்திருந்தால் மழைக்கு சாதகமாக இருந்திருக்க வா்ய்ப்புள்ளது. ஆனால் காற்று வேகமாக வீசி கடல் நோக்கி சென்று கடலுக்குள் மழை பெய்துள்ளது. குறிப்பாக கடலோர மாவட்டங்கள் உள்பட 20 மாவட்டங்களில் நேற்று மழை பெய்தது.
இன்றும் நாளையும் இதே போல மழை பொழிவு இருக்கும் ஆனால் கூடுதல் பரப்பில் பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 16 ம் தேதி முதல் 21ம் தேதி வரையில் தமிழகத்தில் கனமழை பெய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது. வட கடலோரத்தில் பலத்த மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இது தென் மாவட்டங்களிலும் பெய்யும். கேரள எல்லையோரம் தென்மேற்கு பருவமழை பெய்யும். 20ம் தேதி வரை சென்னையில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.
ஆந்திர மாநிலத்தை ஒட்டியுள்ள மாவட்டங்களான திருப்பத்தூர், குடியாத்தம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் பெய்யும். தற்போது மேற்கு வங்கம், பீகார் இடையே ஒரு காற்று சுழற்சி நிலை கொண்டுள்ளது. வங்கக் கடலோரத்தில் வடக்குப் பகுதியிலும் ஒரு காற்று சுழற்சியும்நிலை கொண்டுள்ளது. சீனப் பகுதியில் இருந்து வரும் பலத்த காற்றினால் வங்கக் கடல் பகுதியில் உருவாக உள்ள காற்று சுழற்சியாலும் மழை பெய்யும் வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் நேற்று லேசானது முதல் மிதமான மழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்டம் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதனால் அந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 16, 17ம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி மாவட்டங்கள் மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதேபோல 18, 19ம் தேதிகளில் நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதால் மேற்கண்ட நாட்களுக்கு அந்த பகுதிகளுக்கு ‘‘ரெட் அலர்ட்’’ எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலையை பொருத்தவரையில் இன்று ஒரு சில பகுதிகளில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பநிலை அதிகரித்து காணப்படும். சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி வரை இருக்கும். தமிழக கடலோரப் பகுதிகளில் 16ம் தேதி வரையில் தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 கிமீ வேகத்தில் வீசும். 17ம் தேதி தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று 60கிமீ வேகத்திலும் வீசும்.
மேலும் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடலின் சில பகுதிகள் மற்றும் தெற்கு வங்கக் கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 கிமீ வேகத்தில் வீசும். 17ம் தேதி அந்தமான் கடல் மற்றும் தென்மேற்கு வங்கக் கடலின் தெற்குப் பகுதிகளில் சூறாவளிக் காற்று 60கிமீ வேகத்திலும் வீசும் என்பதால் மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.
The post வங்கக்கடலில் தொடர் காற்று சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் நாளை முதல் கனமழைக்கு வாய்ப்பு: 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை appeared first on Dinakaran.