வருசநாடு: வருசநாடு அருகே பொன்னன்படுகை கிராமத்திற்கு தார்ச்சாலை அமைப்பதற்கு பயன்படுத்தப்பட உள்ள ஜல்லிகற்கள் உள்ளிட்ட பொருட்களை அதிகாரிகள் தர ஆய்வு செய்தனர். வருசநாடு அருகே பொன்னன்படுகை கிராமத்திற்கு செல்லும் சுமார் 5 கிலோமீட்டர் நீளமுடைய சாலையின் இரண்டு புறமும் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் தென்னை, கொட்டை முந்திரி சாகுபடி நடைபெற்று வருகிறது. விவசாயிகள் அதிகம் பயன்படுத்தி வரும் பாதையில் புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பசுமலைத்தேரி முதல் பொன்னன்படுகை வரை புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது.
ஆனால் இதில் சில பகுதிகள் வனத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் தார்சாலை அமைக்கும் பணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால் தார்சாலை பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்த பாதை குண்டும் குழியுமாக இருப்பதால் விவசாயிகள் விளைபொருட்களை ஏற்றிச் செல்வதற்கு சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில், பாதியில் நிறுத்தப்பட்ட பணிகள் மீண்டும் தொடரப்படவுள்ளது. இந்த நிலையில் புதிதாக அமைக்கப்படும் சாலைகள் உரிய தரத்துடன் இருப்பதை உறுதி செய்யும் வகையில், தற்போது கட்டுமானப் பொருட்களின் தரத்தை அதிகாரிகள் பரிசோதித்து பயன்படுத்த அனுமதித்து வருகின்றனர்.
அதன்படி பொன்னன்படுகை கிராமத்திற்கு சாலை அமைப்பதற்காக கொண்டு செல்லப்படும் ஜல்லி கற்கள் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் தரம் குறித்து ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது. கடமலை-மயிலை யூனியன் பொறியாளர் துறை சார்பில் பொறியாளர் கார்த்திக் உள்ளிட்டோர் தர ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.
The post வருசநாடு அருகே கிராமச்சாலை பணிக்கு பொருட்கள் தர ஆய்வு appeared first on Dinakaran.