மலையாள சினிமா அளவுக்கு இந்தியாவில் கம்யூனிஸ்ட் தோழர்களின் வாழ்க்கையைப் பேசியதில்லை. தமிழ் சினிமாவை பின்னோக்கித் திரும்பிப் பார்த்தால், கம்யூனிஸ்ட் இயக்கம் குறித்தும், அது தடை செய்யப்பட்டு, தோழர்கள் மீது அடுக்கடுக்காக ‘சதி வழக்குகள்’ போட்டபட்ட தலைமறைவு காலகட்டம் குறித்து அது பெரிதாக அலட்டிக்கொண்டதில்லை. ஆனால், புலவர் கலியபெருமாளின் வாழ்க்கை, வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை’யாக வெளிவந்து தமிழ்ப் பார்வையாளர்களிடம் வரவேற்பைப் பெற்றது. விஜய்சேதுபதியைத் தொடர்ந்து தற்போது சமுத்திரக்கனி காங்கிரஸ் இயக்கத்திலிருந்து வெளியேறி எப்படி கம்யூனிஸ்டாக உருவானார் என்கிற வரலாற்றுப் பின்னணியுடன் வெளியாகவிருக்கும் ‘வீரவணக்கம்’ படத்தில் முதல்முறையாக தோழர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இதில் சமுத்திரக்கனியுடன் பரத் முதல் முறையாக இணைகிறார். தமிழ்நாடு மற்றும் கேரளாவின் சகோதரத்துவத்தையும் இதய உறவுகளையும் உறுதிப்படுத்தும் ஓர் அபூர்வ திரைப்படம் 'வீர வணக்கம்' என்று படத்தை எழுதி, இயக்கியிருக்கும் பிரபல மலையாளத் திரைப்பட இயக்குநர் அனில் வி. நாகேந்திரன். இப்படத்தில் பரத் தவிர, சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற சுரபி லட்சுமி, ரித்தேஷ், பரணி, ரமேஷ் பிஷாரடி, சித்திக், அரிஸ்டோ சுரேஷ், ஆதர்ஷ், அய்ஸ்விகா, சித்தாங்கனா மற்றும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.