கோவை : வெள்ளக்கோவில் அருகே நாகமநாயக்கன்பட்டி கிராமத்தில் புதிய கற்கால சான்றுகளாக நுண்கற் கருவிகள் மற்றும் இரும்புக்கசடு குவியல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கோவையை சேர்ந்த யாக்கை மரபு அறக்கட்டளை, பல்வேறு பகுதிகளில் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் தாலுகா நாகமநாயக்கன்பட்டி கிராமத்தில் ‘கொல்லன் பாறை’ என்ற இடத்தில் இந்த அமைப்பினர் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில், முன்வரலாற்று கால தொல்லியல் இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த தொல்லியல் வெளிகளை ஆவணப்படுத்தும் பணியில் யாக்கை குழுவை சேர்ந்த அருண்குமார், குமரவேல் ராமசாமி, சுதாகர் நல்லியப்பன், அருண்ராஜா, மோகன் ஆகியோர் ஈடுபட்டனர். அதில் அந்த இடத்தில் 9 கல்தேய்ப்பு குழிகள், நுண்கற் கருவிகள், இரும்புக்கால பண்பாட்டு எச்சங்களான இரும்புக்கசடு குவியல்கள் ஆகிய தடயங்கள் ஒருசேர பதிவாகியிருப்பதை அக்குழுவினர் பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் கூறியதாவது:வெள்ளக்கோவில் சுற்று வட்டாரப்பகுதி நிலங்கள் தொன்மையான மேய்ச்சல் பண்பாட்டிற்கு உரிய முல்லை திணையின் அடையாளங்களை இன்றளவும் தக்க வைத்திருக்கும் பகுதியாக உள்ளது. இப்பகுதியில் உள்ள புல்வெளி வளங்களும், காங்கேயம் காளைகள் உள்ளிட்ட தனித்துவமான நாட்டின கால்நடைகளும், பண்பாட்டு தொடர்ச்சியின் சான்றாக அமைகின்றன.
இவ்வகையான மேய்ச்சல் பண்பாட்டிற்கான தொல்லியல் தடயங்களை, புதிய கற்கால பண்பாட்டு காலத்தில் இருந்து பெற முடிகிறது. தற்போது, கண்டறியப்பட்ட கற்குழிகளும் புதிய கற்கால பண்பாட்டு காலத்தில் கல்லாயுதங்களை, பயன்பாட்டு கற்களை தீட்டுவதற்கும், பண்படுத்தும் நோக்கிலும் பயன்படுத்தப்பட்டதாக தொல்லியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
காங்கேயம், வெள்ளக்கோவில் சுற்றுவட்டார பகுதியில் இத்தகைய சான்றுகள் கிடைத்திருப்பது இப்பகுதியின் மேய்ச்சல் நிலம் சார்ந்த பண்பாட்டு தொடர்புகளையே காட்டுகின்றது. இவ்வகை தொல்லியல் சான்றுகள் வடதமிழகம், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளன.
சமீபத்தில், திருப்பூர் மாவட்டம் தத்தனூர் பகுதியிலும் ஆவணப்படுத்தப்படுத்தி உள்ளோம். கொங்கு பகுதியில் தத்தனூர், நடுவச்சேரி, கேதையுறும்பு ஆகிய இடங்களுக்கு அடுத்தப்படியாக இவ்விடமும் கல்லாயுத குழிகளை கொண்டிருக்கும் இடத்தின் பட்டியலில் இணைகிறது.
பொதுவாக, இவ்வகையான தொல்லியல் இடங்கள், வலிமையான பாறை தன்மையுடைய குன்றுகளிலும், அருகில் வற்றாத நீரூற்று அல்லது சுனை இருக்கும் இடங்களிலும் மட்டுமே அமைக்கப்படும். தற்போது கண்டறியப்பட்ட இவ்விடமும் கிழக்கு தொடர்ச்சி மலையில் காணப்பெறும் பாறைகளை போன்று வலுவான கிரானைட் தன்மையுடையவை. கற்குழிகளில் சுமார் 53 செ.மீ நீளமும் 18 செ.மீ அகலமும் 3.7 செ.மீ ஆழமும் கொண்ட அளவில் பெரியதாகும்.
சுமார் 20 செ.மீ X 20 செ.மீ நீள, அகலம் கொண்டுள்ள கற்குழி அளவில் சிறியதாகவும் உள்ளது.கொல்லன் பாறையில் உள்ள சுனை ‘கொல்லன் பாழி’ என்று அழைக்கப்படுகிறது. இது, சுமார் 680 செ.மீ நீளமும், 220 செ.மீ அகலமும், 240 செ.மீ ஆழமும் கொண்டுள்ளது. இச்சுனை கடும் கோடையிலும் வற்றாத இயல்புடையது. இதை, உள்ளூர் மக்கள் உறுதிபடுத்தியுள்ளனர்.
கொல்லன் பாறையின் அருகே உள்ள கொல்லன் காட்டில் நுண்கற்கால கற்கருவிகளை மேற்பரப்பில் காணமுடிந்தது. அவையாவும் குவார்ட்ஸ் கற்களால் ஆன பிளேடு வகைகளாகும். மேலும் இரும்பு கசடுகளையும் குவியலாக காண முடிந்தது. பெரியளவு சுமார் 25 செ.மீ நீளமும், 15 செ.மீ அகலமும், 10 செ.மீ உயரமும் கொண்டது.
இது தவிர வெவ்வேறு அளவிலான இரும்புக கசடுகளை அங்கு பரவலாகக் காணமுடிந்தது. இவை இரண்டும் தொடர்ந்து அப்பகுதி தொல்லியல் ரீதியாக பெற்றிருந்த முக்கியத்துவத்தை உணர்த்தும் இணை சான்று ஆவணங்கள் ஆகும்.
கொல்லன் பாறையில் தற்போது வழிபாடு நடைபெறுவதை பார்க்க முடிகிறது. கற்குழிகளை சிவன்மலை முருகனின் பாதம் என்று கருதுகின்றனர். மேலும், சிவன்மலைக்கு பாத யாத்திரை செல்லும் முன் இவ்விடத்தில் வழிபாடு செய்துவிட்டு செல்லும் வழக்கம் இருப்பதாக மக்கள் கூறுகின்றனர்.
சமீபத்தில், விநாயகர் கோயிலும், கன்னியாத்தா கோயிலும் இங்கு அமைக்கப்பட்டு வழிபாடு நடைபெறுகிறது. கொல்லன் பாழியின் நீரை அப்பகுதி மக்கள், தமது சடங்குகளின்போது புனித நீராக கருதி பயன்படுத்தும் வழக்கமும் உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post வெள்ளக்கோவில் அருகே நுண்கற் கருவிகள், இரும்புக்கசடு குவியல்கள் கண்டெடுப்பு appeared first on Dinakaran.