வேட்பாளர் சரியில்லை என்றால் நோட்டா பயன்படுத்துங்கள் : ஹசாரே

வேட்பாளர் சரியில்லை என்றால் நோட்டா பயன்படுத்துங்கள்  ஹசாரே

புதுடில்லி : லோக்சபா தேர்தலில் வேட்பாளர்கள் சரியானவர் இல்லை என்றால் வாக்காளர்கள் நோட்டா பட்டனை அழுத்தி தங்களின் ஓட்டுக்களை செலுத்த வேண்டும் என காந்தியவாதி அனச்னா ஹசாரே கேட்டுக் கொண்டுள்ளார். லோக்சபா தேர்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஹசாரே அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது : ஆட்சியை மாற்றுவதால் நாட்டை மாற்றி விட முடியாது; ஆட்சியில் இருப்பவர்கள் ஊழல் செய்வதில் பட்டம் பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்று மற்றொருவரை ஆட்சியில் அமர்த்தினால், அவர்கள் ஊழலில் பட்ட மேற்படிப்பு முடித்தவராக இருக்கிறார்; அதனால், அடிப்படையில் ஆட்சியாளர்களை மாற்றுவதால் மாற்றம் ஏற்படாது; யார் ஒருவர் மாநிலத்திலும், நாட்டிலும் மிகப் பெரிய தீவிரமான மாற்றத்தை கொண்டு வருகிறாரோ அத்தகையவரை சட்டமன்றத்திற்கும், லோக்சபாவிற்கும் அனுப்ப வேண்டும்;
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் யாராவது ஊழல், கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற பின்னணி கொண்டவராக இருந்தால் அவர் சட்டசபைக்கோ அல்லது லோக்சபாவிற்கோ செல்ல தகுதி அற்றவர் என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும்; அத்தகைய குற்றப்பின்னணி கொண்டவரை வேட்பாளராக நிறுத்தி அவரின் கட்சி செய்த தவறை வாக்காளர்களும் செய்து விடக் கூடாது; ஓட்டளிப்பதற்கு முன் வேட்பாளர்கள் கொடுக்கும் இலவசத்திற்கோ, பணத்திற்கோ அல்லது ஆசை வார்த்தைகளிலோ வீழ்ந்து விடக் கூடாது; ஊழல்வாதிகளையும், குற்றப்பின்னணி கொண்டவர்களை நீக்க இதனை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது என்பதை வாக்காளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்;

வாக்காளர்கள் தான் ஜனநாயகத்தின் தூண்கள்; வேட்பாளர்கள் பட்டியலில் இருப்பவர்கள், நடத்தை ரீதியாகவும் குற்றப் பின்னணி இல்லாதவராகவும் இல்லை என்றால் வாக்காளர்கள் நோட்டா பட்டனை பயன்படுத்த வேண்டும்; அவ்வாறு நடந்தால் முறையற்ற அரசியல் கட்சிகளுக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட முடியும்; அவ்வாறு இல்லாமல் ஓட்டுக்கு ரூ.200 அல்லது ரூ.500 வாங்கிக் கொண்டு தவறான வேட்பாளர்களுக்கு ஓட்டளித்தால் அதன் பிறகு அந்த கட்சியினர் மக்களை மறந்து விட்டு, தர்பார் போக்கான செயல்களில் ஈடுபடுவர். இவ்வாறு ஹசாரே தெரிவித்துள்ளார்.

தினமலர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


TOP