மும்பை: லஞ்சம் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டதன் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தைகளில் நேற்றைய வர்த்தகத்தில் அதானி குழும நிறுவன பங்குகளின் விலை 23 சதவீதம் வரை சரிவை சந்தித்தன. குறிப்பாக, அதானி எண்டர்பிரைசஸ் பங்கு அதிகபட்சமாக 22.61 சதவீதம் வீழ்ச்சி கண்டு ரூ.2,182.55-ல் நிலைபெற்றது. அதேபோன்று, அதானி எனர்ஜி சொல்யூஷன் பங்கும் 20 சதவீதம் சரிந்து ரூ.697.70-ஆனது. அதானி போர்ட்ஸ் 13.53 சதவீதமும், அம்புஜா சிமெண்ட்ஸ் 11.98 சதவீதமும் வீழ்ச்சி அடைந்தன.
இதன் மூலம், நேற்றைய வர்த்தகத்தில் அதானி குழுமத்தின் ஒட்டுமொத்த சந்தை மூலதன மதிப்பு ரூ.2 லட்சம் கோடிக்கும் மேல் வீழ்ச்சி கண்டது. அதன்படி, ஊழல் குற்றச்சாட்டுக்கு முன்பாக ரூ.14.31 லட்சம் கோடியாக இருந்த அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு குற்றச்சாட்டுக்கு பிறகு ரூ.12.1 லட்சம் கோடியாக சரிவடைந்தது என புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.