புதுடெல்லி: அமெரிக்காவில் விபத்துக்குள்ளாகி கோமாவில் இருக்கும் மகளைப் பார்க்க தனக்கு அமெரிக்கா செல்ல அவசர விசா வழங்க வேண்டும் என்று மாணவியின் தந்தை வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், அவருக்கு உதவுமாறு வெளியுறவுத்துறை அமைச்சருக்கு என்சிபி எம்.பி. சுப்ரியா சுலே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் நீலம் ஷிண்டே. இவர் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் தங்கிப் படித்து வருகிறார். பிப்.14-ம் தேதி அங்கு நடந்த விபத்தில் சிக்கிய நீலம் தற்போது கோமாவில் உள்ளார். அவர் மீது நான்கு சக்கர வாகனம் மோதியதில், எலும்பு முறிவு, தலை மற்றும் நெஞ்சுப் பகுதியில் படுகாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் பின்னனியில் நீலம் ஷிண்டேவின் தந்தையான தானாஜி ஷிண்டே மகளைக் காண அவசர விசா வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சுப்ரியா சுலே, இந்த விவகாரத்தை கவனத்தில் கொண்டு நீலம் குடும்பத்துக்கு உதவுமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.