மதுரை/தேனி: ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையான இன்று அதிகாலை முதல் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் கலந்துகொண்டு கூழ் ஊற்றி அம்மனை வழிபட்டனர். தமிழ் மாதங்களில் ஆடி மாதம் அம்மன் கோயில்களில் விழாக்கள் களைகட்டும். இந்த ஆண்டு ஆடி மாதம் நேற்று பிறந்தது. இதையொட்டி மதுரையில் மீனாட்சியம்மன் கோயில், வண்டியூர் மாரியம்மன், ஆயுதப்படை மாரியம்மன் கோயில்களில் அதிகாலை முதல் பெண் பக்தர்கள் குவிந்து வழிபட்டனர். அழகர்கோவில் மலை மீதுள்ள ராக்காயி அம்மன் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடி அம்மனை தரிசனம் செய்தனர். இதேபோல் திருமங்கலம் காட்டு பத்ரகாளியம்மன், காட்டுமாரியம்மன், கருமாரியம்மன், சோழவந்தான் ஜெனக மாரியம்மன், மடப்புரம் காளியம்மன் உள்ளிட்ட அனைத்து அம்மன் கோயிலிலும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, வழிபாடுகள் நடந்தன. பக்தர்களுக்கு கூழ், பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டன. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல, தேனி அருகே முல்லையாற்றின் கரையில் அமைந்துள்ள வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை, அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் அதிகாலையிலேயே திரண்டு வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்தனர். கோயில் பிரகாரத்தில் நெய் விளக்கேற்றி வழிபட்டனர். பக்தர்களுக்கு கூழ், நீர்மோர், பானகம், சாதம், பொங்கல் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதேபோல கம்பம் கவுமாரியம்மன் கோயில், சின்னமனூர் பூலாநந்தீஸ்வரர்-சிவகாமி அம்மன் கோயில், தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயிலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பஸ் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. விருதுநகர் பராசக்தி மாரியம்மன், இருக்கன்குடி மாரியம்மன் கோயிலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதேபோல, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களிலும் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருவாடானையில் அதிர்ஷ்ட விநாயகருக்கு சிறப்பு ஆராதனை நடத்தப்பட்டது.
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. கோயில் வளாகத்தில் பெண்கள் கூழ் காய்ச்சி பக்தர்களுக்கு வழங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதே போல் பிரளயநாயகி அம்மன், கோட்டை காளியம்மன், பச்சை காளியம்மன், வடக்கத்தி காளியம்மன், உச்சிமாகாளியம்மன், திரவுபதி அம்மன், பத்ரகாளியம்மன், உளுந்தூர் காளியம்மன், சந்தன மாரியம்மன் மற்றும் முதலைக்குளம் கம்ப காமாட்சி அம்மன் (கருப்பு) கோயில், தென்கரை அகிலாண்டேஸ்வரி, திருவேடகம் ஏழவார்குழலி கோயில்களிலும், கிராம கோயில்களிலும் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
The post அம்மன் கோயில்களில் ஆடி வெள்ளி வழிபாடு: பெண் பக்தர்கள் குவிந்தனர்; கூழ் ஊற்றி பிரார்த்தனை appeared first on Dinakaran.