திருப்பூர் : 2025-26ம் கல்வி ஆண்டில் திருப்பூர் கல்வி மாவட்டத்தில் எல்கேஜி முதல் 8ம் வகுப்பு வரை 9,491 மாணவர்கள் சேர்க்கை நடந்தது. இதனால் தமிழகத்திலேயே அரசு பள்ளிகளில் அதிகமானவர் சேர்க்கையில் திருப்பூர் கல்வி மாவட்டம் 3ம் இடம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் 2025-26ம் கல்வி ஆண்டிற்கு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த மார்ச் 1ம் தேதி தொடங்கியது.
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் வகையில் கடந்த 2 ஆண்டுகளாகவே முன்கூட்டியே அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவங்கப்பட்டு நடத்தப்படுகிறது. அதிக அளவிலான தனியார் பள்ளிகள், அவை வழங்கிய ஆங்கில வழிக் கல்வி ஆகியவை பொதுமக்களிடையே அதிக வரவேற்பு பெற்றது. இதனால் அரசு பள்ளிகளின் மீதான ஆர்வம் வெகுவாக குறைந்தது.
இதன் பின் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அரசு பள்ளிகளின் கட்டமைப்பு வசதி மட்டுமல்லாது மாணவர்களின் வருகையை அதிகப்படுத்துவதற்கும், ஊக்கப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அரசு பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த பள்ளி மேலாண்மை குழு உருவாக்கப்பட்டு பள்ளிக்கு தேவையான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டது.
தொடக்கக் கல்வியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த காலை சிற்றுண்டி திட்டம் பெரும் பலனாய் அமைந்தது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச சீருடை, பாட புத்தகங்கள், புத்தகப்பை உள்ளிட்டவையும் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் புதுமைப்பெண் கல்வி உதவித் தொகை திட்டம், தமிழ் புதல்வன் கல்வி உதவி தொகை திட்டம், திறனாய்வு கல்வி உதவித் தொகைகள், அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வியில் 7.5% இட ஒதுக்கீடு, நவீன ஆய்வகங்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள், 1ம் வகுப்பு மாணவர்களுக்கு தொடுதிரை, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டுதல்கள், ஆன்லைன் திறன் மேம்பாட்டு வகுப்புகள், கல்வி சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு செயல்படுத்தப்படுகிறது. இவற்றின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் நடப்பு கல்வி ஆண்டில் தமிழக முழுவதும் உள்ள அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3 லட்சத்து 12 ஆயிரத்து 881 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் சென்னை, செங்கல்பட்டு கல்வி மாவட்டங்களுக்கு அடுத்தப்படியாக திருப்பூர் கல்வி மாவட்டத்தில் 590 ஆரம்பம் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் மழலையர் வகுப்பு (கே.ஜி வகுப்புகள்) முதல் 8ம் வகுப்பு வரை 9,491 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் அதிக மாணவர்கள் சேர்க்கையில் மாநில அளவில் திருப்பூர் கல்வி மாவட்டம் 3ம் இடம் பெற்றது. மேலும் இந்த மாதம் இறுதி வரை மாணவர் சேர்க்கைக்கு அவகாசம் வழங்கப்பட்டிருப்பதன் மூலம் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கூறுகையில், ‘கடந்த காலங்களை விட அரசு பள்ளிகள் கட்டமைப்பில் தனியார் பள்ளிகளுக்கு மேலாக மேம்படுத்தப்பட்டுள்ளது. 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள எங்கள் பள்ளியில் 6ம் வகுப்புகள் நவீன ஸ்மார்ட் கிளாஸ் ரூம் ஆக உருவாக்கப்பட்டது. மேலும் காலை சிற்றுண்டி உணவுத் திட்டம் உள்ளிட்டவை காரணமாக அருகில் உள்ள பெற்றோர்கள் அரசு பள்ளிகளில் மாணவர்களை ஆர்வத்துடன் சேர்த்து வருகின்றனர்.
தனியார் பள்ளிகளில் தொடக்க கல்வியிலேயே அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு மட்டும் சேர்க்கை நடத்துவதால் பெற்றோர்கள் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை விரும்புகின்றனர். அரசு பள்ளிகளில் கட்டமைப்பு மட்டுமல்லாது தரமான கல்வியும் உறுதி செய்யப்படுவதால் 100% தேர்ச்சி பெற வைக்க முடிகிறது. மேலும் அரசு வழங்கும் பல்வேறு உதவி திட்டங்களால் அரசு பள்ளிகளில் ஆண்டு தோறும் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.
அதிகரிக்கும் சேர்க்கை
மார்ச்1ம் தேதி முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரக்கூடிய நிலையில் திருப்பூர் கல்வி மாவட்டத்தில் எல்கேஜி பிரிவில் 362, யுகேஜி 245, 1ம் வகுப்பில் தமிழ் வழிக் கல்வியில் 3582, ஆங்கில வழிக் கல்வியில் 2225, 2ம் வகுப்பில் 582, 3ம் வகுப்பில் 534, 4ம் வகுப்பில் 511, 5ம் வகுப்பில் 482, 6ம் வகுப்பில் 717, 7ம் வகுப்பில் 149, 8ம் வகுப்பில் 102 பேர் என 9,491 பேர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. இதில் பள்ளி தொடங்கிய ஜூன் 2 தேதிக்குப் பிறகு சுமார் 5,800 மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளது குறிப்பிடதக்கது.
சலிப்பு இல்லாத உற்சாகம்
திருப்பூர் நொய்யல் வீதி தொடக்கப் பள்ளியில் 5ம் வகுப்பு மாணவி தன்ஷிகா கூறுகையில், எங்கள் வகுப்பு ஸ்மார்ட் கிளாஸ் ரூம் ஆக மாற்றப்பட்டது. போர்டில் எழுதுவதை விட ஸ்மார்ட் போர்டில் வீடியோவாகவும் படங்களாகவும் காட்டப்படும் போது அவை ஆர்வமாக உள்ளது. புத்தகங்களில் உள்ள பாடங்கள் கூட பல்வேறு வடிவங்களில் வீடியோவாக காட்டப்படுவதால் படிப்பதில் உற்சாகம் ஏற்படுகிறது. வீடியோவாகவும் ஆடியோவாகவும் பார்க்கப்படுவதால் எளிதில் மனதில் பதிவு செய்ய முடிகிறது என தெரிவித்தார்.
The post அரசின் பல்வேறு கல்வி திட்டங்களால் அரசு பள்ளி மாணவர் சேர்க்கையில் மாநில அளவில் திருப்பூர் 3ம் இடம் appeared first on Dinakaran.