இலங்கைப் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலக வேண்டும் என்றும் ராஜபக்சே குடும்பத்தினர் அரசியலைவிட்டு வெளியேற வேண்டும் என்றும் இலங்கை மக்களில் பத்தில் ஒன்பது பேர் கருத்துரைத்துள்ளனர்.
மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தின் கருத்தாய்வுப் பிரிவு மேற்கொண்ட ஜனநாயக ஆளுகை நம்பகத்தன்மைக் குறியீடு இரண்டாம் கட்ட ஆய்வில், அதிபர் கோத்தபாய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைக்கு 87 விழுக்காட்டினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
“ஆகையால், நாட்டில் இப்போது நிலவும் நெருக்கடியைத் தீர்ப்பதில் ராஜபக்சே குடும்பத்தினருக்குப் பங்கில்லை என்றும் அவர்களை வெளியேற்றுவதே இப்போதைய நெருக்கடியிலிருந்து வெளியேறுவதற்கான வழி என்றும் மக்கள் நம்புவதை இந்தக் கருத்தாய்வு தெளிவாக உணர்த்துவதாக மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் கூறியிருக்கிறது.
மூன்று ஆண்டுகளுக்குமுன் ராஜபக்சேக்களுக்கு அதிக அளவில் வாக்களித்து பெரும்பான்மை சிங்கள இனத்தவர் உட்பட அனைத்து இனத்தவர்களும் இதே கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பதை முக்கியமாகப் பார்க்க வேண்டும் என்று அந்த மையம் குறிப்பிட்டது.
“இப்போதைய நெருக்கடியில் இருந்து விடுபடும்வரை வல்லுநர்குழுவைக் கொண்டு நாட்டை நிர்வகிப்பது, அதிபருக்கான செயல் அதிகாரங்களைத் திரும்பப்பெறுவது, அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடங்கிய இடைக்கால அரசை அமைப்பது, அரசியலமைப்பின் 20வது சட்டத்திருத்தத்தை ரத்து செய்து, 19வது சட்டத்திருத்தத்திற்கு ஒப்பான ஒன்றைக் கொண்டுவருவது ஆகிய மற்ற கோரிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்,” என்று அம்மையம் கூறி இருக்கிறது.
இருப்பினும், நாடாளுமன்றத்தின் 225 உறுப்பினர்களும் ஒட்டுமொத்தமாகப் பதவி விலக வேண்டும் எனும் கோரிக்கை தொடர்பில் மக்கள் கவனமாக இருப்பதாகத் தெரிகிறது. அக்கோரிக்கைக்கு 56% இலங்கை மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பெரும்பான்மையை நிரூபிப்போம்: எதிர்க்கட்சியினர் உறுதி
இந்நிலையில், அரசாங்கத்திற்கு எதிராக அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்போது பெரும்பான்மையை நிரூபிப்போம் என்று எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மண் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
புதிய பிரதமர் தலைமையில் இடைக்கால அரசு அமைப்பதற்குக் குறைந்தது 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதை நிரூபித்துக்காட்டுமாறு எதிர்க்கட்சிகளை அதிபர் கோத்தபாய ராஜபக்சே கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், அதிபர் கோத்தபாய மீதும் நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தி, அவரைப் பதவிநீக்கம் செய்ய முயல்வோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் இன்னொரு எம்.பி. முஜிபுர் ரகுமான் சொன்னார்.
சுதந்திர தினம் கொண்டாட ரூ.95 மில்லியன் செலவு
இதனிடையே, நாடு பெரும் பொருளியல் நெருக்கடியை எதிர்கொண்டுவரும் வேளையில், 74வது சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்கு 95 மில்லியன் ரூபாயை இலங்கை அரசாங்கம் செலவிட்டது தகவலறியும் உரிமைச் சட்டத்தின்மூலம் தெரிய வந்துள்ளது.
சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்காகக் கடந்த ஆண்டுகளில் செலவிடப்பட்ட தொகையில் இதுவே ஆக அதிகம் என்று ‘சிலோன் டுடே’ செய்தி கூறியது.