சிதம்பரம்: அரசு சேவைகள் வீடு தேடி வரும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற புதிய திட்டத்தை சிதம்பரத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள, விடுபட்ட பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு பரிசீலித்து உதவித்தொகை வழங்கப்படும். தமிழக அரசின் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக கடலூர் மாவட்டம் சிதம்பரத்துக்கு நேற்று முன்தினம் இரவு பாம்பன் ரயில் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றார்.
அங்கு வரவேற்புக்கு பின்னர், ரயில் நிலையத்தில் இருந்து கீழ வீதியிலுள்ள தனியார் மகால் வரை 2 கி.மீ தூரம் வேனில் சென்றார். அப்போது சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு வரவேற்பு அளித்தனர். தனியார் மகாலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இரவு தங்கினார். நேற்று காலை காவல்துறை மரியாதையை ஏற்றபின் சிதம்பரம் படித்துறை இயக்கம் வழியாக சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு முதல்வர் சென்றார். அப்போது வழியில் வேணுகோபால் தெருவில் சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மனுக்களை பெற்றார்.
தொடர்ந்து, அரசு பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் மாணவிகளுடன் முதல்வர் சில நிமிடம் கலந்துரையாடினார். பின்னர் ஜிஎம் வாண்டையார் திருமண மண்டபத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அண்ணாகுளம் அருகில் புதுப்பிக்கப்பட்ட அம்பேத்கர் சிலையை திறந்து வைத்த முதல்வர், அவரது உருவப்படத்துக்கும் மலர்தூவி மரியாதை செய்தார்.
பின்னர் லால்புரம் புறவழிச் சாலையில் இளையபெருமாள் முழுவுருவ சிலையையும், ரூ.6 கோடியே 39 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள இளையபெருமாள் நூற்றாண்டு அரங்கையும் திறந்து வைத்தார். விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற முன்னெடுப்பு மூலமாக பொதுமக்களான உங்களிடம் இருந்து வாங்கிய மனுக்களுக்கு 100 நாளில் தீர்வு காண்பேன், நடவடிக்கை எடுப்பேன் என உறுதி அளித்திருந்தேன்.
சொன்ன மாதிரியே முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்று ஒரு தனி துறையே உருவாக்கி அந்த மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. இதனால் நமது அரசின் மீது நம்பிக்கை வைத்து இன்னும் பலர் மனுக்களை வழங்கத் தொடங்கினார்கள். அதற்காக முதல்வரின் முகவரி என்ற தனித் துறையை உருவாக்கினோம். அடுத்து மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின்மூலம் தமிழகம் முழுவதும் 5000 முகாம்கள் நடத்தி பல லட்சம் மனுக்களுக்கு தீர்வு கண்டோம். இப்போது அடுத்தகட்டமாக உங்களுடன் ஸ்டாலின் முகாம்களை தொடங்கி இருக்கிறோம்.
மொத்தம் 10 ஆயிரம் முகாம்கள் நடக்கப்போகுது. தன்னார்வலர்கள் வீடு வீடாக வந்து உங்களை சந்தித்து முகாம் நடக்கும் நாள், இடம் உள்ளிட்ட எல்லா தகவல்களையும் சொல்லி விடுவார்கள். என்னென்ன ஆவணங்களை நீங்கள் முகாமிற்கு கொண்டு வர வேண்டும் என்ற தகவலையும் சொல்லி விண்ணப்பங்களை வழங்கி விடுவார்கள். மாதம் ரூ.1000 வழங்குகின்ற கலைஞரின் உரிமைத் திட்டம் உள்ளிட்ட 46 சேவைகள் தொடர்பாக தீர்வு காண விண்ணப்பங்களை கொடுக்கப் போகிறோம்.
தகுதி இருந்தும் 1000 ரூபாய் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் உங்கள் பகுதியில் முகாம் நடைபெறுகின்ற அன்றைக்கு விண்ணப்பங்களை கொடுத்தால்போதும். நிச்சயமாக சொல்றேன். உங்களுக்கு நிச்சயமாக உரிமைத் தொகை வழங்கப்படும். இந்த திட்டத்தின் நோக்கமே மக்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று அரசின் சேவைகளையும், திட்டங்களையும் வழங்குவதுதான். இல்லம் தேடி கல்வி, மக்களைத் தேடி மருத்துவம் அந்த வரிசையில் இந்த முன்னெடுப்பில் அரசு அலுவலர்களும், அதிகாரிகளும் உங்களைத் தேடி வரப்போகிறார்கள்.
இந்த முகாம்கள் நடைபெறும் இடங்களில் மருத்துவ முகாம்களும் சேர்த்து நடைபெறும். இப்படி மக்களான உங்களின் தேவைகளை அறிந்து அதை தீர்த்து வைப்பதுதான் நம்முடைய திராவிட மாடல் அரசு இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திருவள்ளுவர் சிலையை நினைவுப் பரிசாக அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் வழங்கினார். மற்ற விருந்தினர்களும் முதல்வருக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பித்தனர். மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் புத்தகம் வழங்கினார். விழாவின்போது எல்.இளையபெருமாளின் குறும்படம் வெளியிடப்பட்டது.
* 1000 முகாம்கள் : 45 நாளில் தீர்வு
உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 10,000 முகாம்கள் ஜூலை 15ம் தேதி முதல் நவம்பர் 2025 வரை நடத்தப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். இத்திட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் முதற்கட்டமாக, நேற்று முதல் ஆகஸ்ட் 15ம்தேதி வரை 3,563 முகாம்கள் நடத்தப்படவுள்ளன. இதில் 1,428 முகாம்கள் நகர்ப்புறங்களிலும், 2,135 முகாம்கள் ஊரகப் பகுதியிலும் நடக்கிறது.
இத்திட்டத்தின் கீழான முகாம்களில் நகர்ப்புறப் பகுதிகளில் 13 அரசுத் துறைகளின் 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 அரசுத் துறைகளின் 46 சேவைகளும் வழங்கப்படும். இந்த முகாம்கள் நடைபெறும் பகுதிகளில், இத்திட்டம் குறித்த விழிப்புணர்வுப் பணிகள், விண்ணப்பம் மற்றும் அரசு வழங்கும் சேவைகளைப் பெறத் தேவையான தகுதிகள்., ஆவணங்கள் ஆகிய விவரங்கள் அடங்கிய தகவல் கையேட்டினை வழங்கும் பணியினை தன்னார்வலர்கள், அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் முகாம் நடைபெறும் நாள், இடம் குறித்த விவரங்களுடன், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள, விடுபட்ட பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம் என்ற விவரமும் தன்னார்வலரால் தெரிவிக்கப்படுகிறது. முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்களின் மீது உடனடியாகத் தீர்வு கிடைக்கக்கூடிய இனங்களில் உடனடியாகத் தீர்வு காணப்படும். பிற இனங்களில் அதிகபட்சமாக 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் தலைமை ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார். வீடு, வீடாக விழிப்புணர்வு பணி மேற்கொள்வதற்கும், முகாம்களை ஏற்பாடு செய்வதற்கும், ஒவ்வொரு ஒன்றியம், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிக்கும் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
* காமராஜர் பிறந்த நாளில் புதிய திட்டம் முதல்வர் பெருமிதம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூகவலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது: கதர் சட்டை அணிந்து கருப்புச் சட்டைக்காரரின் பணிகளைச் செய்த கர்மவீரர்; பெரியாரின் வழிகாட்டலில் ஆட்சி நடத்திய பச்சைத் தமிழர். திறமை என்பது பிறப்பால் வருவதல்ல, வாய்ப்பு கொடுத்தால் எவரும் பெறுவது என ஓங்கி உரைத்த பெருந்தலைவர். மக்களோடு மக்களாக எளிய தலைவராக வாழ்ந்த அவரது பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்தி, மக்களை நாடி அரசு செல்லும் திட்டத்தை தொடங்கி வைத்தேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
* ஒரு மணி நேரத்தில் 3 மனுக்களுக்கு தீர்வு
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே, காதொலி கருவி வேண்டி விண்ணப்பித்த சபரீஷ் என்ற மாற்றுத்திறனாளி பயனாளிக்கு காதொலி கருவியையும், மருத்துவ காப்பீட்டு அட்டை வேண்டி விண்ணப்பித்த செந்தமிழ் செல்வி என்ற பயனாளிக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீட்டு அட்டையும், மின்சார இணைப்பு பெயர் மாற்றம் வேண்டி விண்ணப்பித்த பெருமாள் என்ற பயனாளிக்கு மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கான ஆணையையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
* வாரம் 4 நாட்கள் முகாம்
சிதம்பரத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த 52 அரசு துறைகளின் அரங்குகளை பார்வையிட்டு, ஒவ்வொரு துறை சார்ந்த அலுவலர்களிடம் கலந்துரையாடினார்.
மேலும் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்ட முதல்வர், உடனடி தீர்வு காணுமாறு அரங்கில் இருந்த அதிகாரிகளிடம் கொடுத்தார். அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் தொடங்கப்பட்டது. ஒரு மாவட்டத்தில் 6 முகாம் நடத்தப்படுகிறது. வாரத்தில் திங்கள், சனி, ஞாயிறு தவிர்த்து மற்ற 4 நாட்களில் முகாம்கள் நடக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
The post அரசு சேவைகள் வீடு தேடி வரும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்: விடுபட்ட பெண்களுக்கு உரிமைத்தொகை கிடைக்கும்; மனுக்களை பெற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.