தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் அணையின் இடதுகரை கால்வாய்க்காக சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் 8 பேர் மண் சரிவில் சிக்கி உயிருக்குப் போராடி வருகின்றனர். இந்திய ராணுவம், கடற்படை,தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை என அனைத்து தரப்பினரையும் உதவிக்கு வரவழைத்த நிலையிலும், கடந்த 3 நாட்களுக்கு மேலாக சுரங்கத்தில் சிக்கிக்கொண்டவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இறுதியாக வேறு வழியின்றி ‘எலி வளை சுரங்கத் தொழிலாளர்கள்’ மீட்புப் பணிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2023-ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கம் சரிந்து விழுந்து 41 பேர் சிக்கிக் கொண்டபோது, ராட்சத எந்திரங்களே பழுதாகி கைவிட்ட நிலையிலும், எலி வளை சுரங்கத் தொழிலாளர்கள் உயிரைப் பணயம் வைத்து உள்ளே சென்று 41 பேரையும் உயிருடன் மீட்டுக் கொண்டு வந்தனர். அவர்கள் தற்போது தெலங்கானா விபத்திலும் மீட்புப் பணிக்கு வரவழைக்கப்பட்டுள்ளது ஆறுதல் அளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது. ஸ்ரீசைலம் சுரங்கத்தில் சேறும் சகதியுமாக இருப்பதால், அதில் எப்படி நுழைந்து சிக்கியுள்ளவர்களை மீட்க முடியும் என்பதை அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.