சென்னை: ஆள் கடத்தல் வழக்கில் முன் ஜாமீன் தள்ளுபடி ஆன நிலையில் குடும்பத்துடன் தலைமறைவாக உள்ள கே.வி.குப்பம் எம்எல்ஏ ஜெகன் மூர்த்தியை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைத்து சிபிசிஐடி போலீசார் தேடி வருகின்றனர். மேலும், அவர்கள் குறித்த தகவல்களை சேகரிக்க உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே களாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தனுஷ்(23). இவர், தேனி மாவட்டத்தை சேர்ந்த விஜய(21) என்ற பட்டதாரி பெண்ணை காதலித்து கடந்த மாதம் 15ம்தேதி பதிவு திருமணம் செய்து கொண்டார். காதல் திருமணத்திற்கு இளம்பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என தக்கோலம், திருவள்ளூர், சென்னை காவல்நிலையங்களில் புகார் மனு அளித்திருந்தனர்.
இதற்கிடையில், திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் கிராமத்தில் உள்ள வீட்டில் இருந்த தனுஷ் சகோதரர் இந்திரசந்த்(18) என்பவரை கடந்த 7ம் தேதி ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஜெயராமன் பயன்படுத்தும் சைரன் வைத்த அரசு வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று கடத்தி சென்று சிறிது நேரம் மீண்டும் அதே இடத்தில் விடுவித்து சென்றனர். இந்த கடத்தல் விவகாரத்தில் புரட்சி பாரதம் கட்சி தலைவரும் கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினராக ஜெகன் மூர்த்தி பின்னணியில் இருப்பதாக கடத்தப்பட்ட இந்திரசந்த் தாய் திருவாலங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி ஜெகன் மூர்த்தி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.
பின்னர் ஜெகன் மூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை நீதிபதி வேல்முருகன் முன்பு விவாதத்திற்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஜெகன் மூர்த்தியை நீதிபதி கடுமையாக கண்டித்தார். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரின் உரிமையாளரான கூடுதல் டிஜிபி ஜெயராமன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டார். அதேபோல் போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஜெகன் மூர்த்திக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
அதனை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திலேயே திருவாலங்காடு இன்ஸ்பெக்டர் நரேஷ் தலைமையிலான போலீசார் கூடுதல் டிஜிபி ஜெயராமனை கைது செய்து 18 மணி நேரம் திருவள்ளூர் டிஎஸ்பி தமிழரசி, திருத்தணி டிஎஸ்பி கந்தன், திருவாலங்காடு இன்ஸ்பெக்டர் நரேஷ் ஆகியோர் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர். அதனை தொடர்ந்து கூடுதல் டிஜிபி ஜெயராமன் விடுவிக்கப்பட்டார். மேலும், நீதிமன்ற உத்தரவுப்படி ஜெகன் மூர்த்தி திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் 10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு ஜெகன் மூர்த்தியையும் போலீசார் விடுவித்தனர்.
இதற்கிடையே கூடுதல் டிஜிபி ஜெயராமன் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். வழக்கை விசாரணை பட்டியலிடப்பட்டது. ஏற்கனவே, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தபடி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் பூவை மூர்த்தியின் முன்ஜாமீன் மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள், ஜெகன் மூர்த்தியை சந்தித்த சிசிடிவி புகைப்பட காட்சிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் காவல்துறை கூடுதல் டிஜிபி ஜெயராமன் ஆகியோரிடம் பேசிய ஆடியோ பதிவுகள், கைப்பற்றப்பட்ட பணம், மகேஸ்வரியின் வாக்குமூலம், குற்ற செயலுக்காக காவல்துறை வாகனத்தை பயன்படுத்தியது ஆகியவை தொடர்பான ஆவணங்கள், புகைப்படங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து ஜெகன் மூர்த்தியின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் ஜெகன் மூர்த்தியை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் போலீசார் தன்னை கைது செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் தனது குடும்பத்தினருடன் தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து சிபிசிஐடி டிஎஸ்பி வேல்முருகன்
தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து ஜெகன் மூர்த்தியை தேடி வருகின்றனர்.
அதேநேரம் ஜெகன் மூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் பயன்படுத்திய செல்போன் சிக்னல்களை வைத்து கடைசியாக பேசிய உறவினர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களை பிடித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது ஜெகன் மூர்த்தி சாலை மார்க்கமாக ஆந்திரா அல்லது கர்நாடகா மாநிலம் தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இருந்தாலும் சிபிசிஐடி போலீசார் ஜெகன் மூர்த்தி தொடர்பான உறவினர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களின் செல்போன் சிக்னல்களை வைத்து கைது செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே நீதிமன்றம் ஜெகன் மூர்த்தியை கண்டித்திருந்த நிலையில் தற்போது அவர் தனது குடும்பத்துடன் தலைமறைவாகி இருப்பது மேலும் அவர் மீதான குற்றத்தை நிரூபிக்கும் வகையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
The post ஆள் கடத்தல் வழக்கில் குடும்பத்துடன் தலைமறைவான ஜெகன் மூர்த்திக்கு நெருக்கமானவர்களிடம் சிபிசிஐடி தீவிர விசாரணை: ஆந்திரா, கர்நாடகாவில் 4 தனிப்படை தேடுதல் வேட்டை appeared first on Dinakaran.