லாகூரில் இங்கிலாந்து அதிர்ச்சித் தோல்வி என்று பாப்புலர் ஊடகங்கள் தலைப்பு வைத்து எழுதும் காலம் முடிந்து விட்டது. இனி இங்கிலாந்து வென்றால் எதிரணி அதிர்ச்சித் தோல்வி என்றுதான் டைட்டில் வைக்க வேண்டும். அல்லது, இங்கிலாந்து அதிர்ச்சி வெற்றி என்றுதான் எழுத வேண்டும். அந்த அளவுக்கு இங்கிலாந்து வெள்ளைப்பந்து கிரிக்கெட்டையும், குறிப்பாக துணைக் கண்டத்தில் ஆடுவதையும் கேலிக்கூத்தாக்கி வருகின்றனர்.
ஆப்கான் கேப்டன் நேற்று மிகத் துல்லியமாக டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். அன்று ஆஸ்திரேலியா இங்கிலாந்தின் 350 ரன்களை விரட்டிய அதே பிட்ச்தான் இதுவும். இருந்தும் இங்கிலாந்தினால் 325 ரன்களை சேஸ் செய்ய முடியவில்லை. 2023 உலகக் கோப்பையில் டெல்லியில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து, ஆப்கானிஸ்தானின் 285 ரன்கள் இலக்கை விரட்ட முடியாமல் 215 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இப்போது மீண்டும் ஒரு ஐசிசி தொடரில் தொடர்ச்சியாக 2-வது முறை ஆப்கனிடம் தோல்வி அடைந்துள்ளது இங்கிலாந்து.