வாஷிங்டன்: இந்தியாவில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள், பசு பாதுகாப்பு என்ற பெயரில் கும்பலாக திரண்டு கொலை செய்யும் கொடூரங்கள் அரங்கேறி வருவதாக அமெரிக்கா விமர்சித்துள்ளது. இந்தியாவில் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளால் சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்கள், மற்றும் அவர்களை சார்ந்த அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், பாதிக்கப்பட்டு இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் அந்தஸ்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதக் கலவரங்கள், மத வெறியை ஊக்குவிக்கும் கொலைகள், தாக்குதல்கள் அரங்கேறி வருவதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் அடித்துக் கொல்லும் நிகழ்வுகள் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முஸ்லிம் பெயரில் இருக்கும் நகரங்கள், தெருக்கள் பெயர்களை மாற்றம் செய்து வரலாற்று இருட்டடிப்பு செய்வதாகவும் அமெரிக்க அறிக்கை விமர்சித்துள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் 18 தாக்குதல்களில் 8 பேர் கொல்லப்பட்டு இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கிறிஸ்தவ மதபோதகர்களுக்கு எதிராக 300 முதல் 500 வரையிலான தாக்குதல்களை தொண்டு நிறுவன்கள் ஆவணப்படுத்தி இருப்பதை அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறது. மேலும் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பூட்டும் கருத்துக்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.