சென்னை: இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கியது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு பி.இ மற்றும் பி.டெக் இடங்களுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்தாண்டு பொறியியல் கலந்தாய்வுக்காக சுமார் மூன்று லட்சத்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பம் பதிவு செய்ததில் 2, 41,641 மாணவர்கள் இறுதியாக தகுதி பெற்றனர்.
அதன்படி இவர்களுக்கான கலந்தாய்வு கடந்த 14ம் தேதி நடத்தப்பட்டது. முதல் இரண்டு நாட்கள் அரசு பள்ளிகளில் படித்த சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும் , அதன் தொடர்ச்சியாக பொதுப்பிரிவில் உள்ள சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது.
பொதுப்பிரிவு மாணவர்களுக்கான முதல் சுற்று கலந்தாய்வில் 39, 145 பேர் பங்கேற்கவுள்ளனர். முதல் சுற்றில் பங்கேற்கும் மாணவர்கள் ஜூலை 16க்குள் கல்லூரிகளை தேர்வு செய்ய வேண்டும். ஜூலை 17ல் தற்காலிக ஒதுக்கீடு ஆணை தரப்பட்டு, ஜூலை 18ல் மாணவர்கள் ஒப்புதல் தர வேண்டும். இறுதி ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் ஜூலை 23ம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும். மொத்தம் 3 சுற்றுகளாக நடைபெறும் பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்ட் 20ல் நிறைவு பெறுகிறது.
The post இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம் appeared first on Dinakaran.