கடலூர் : தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள பொதுமக்களின் வீடு தேடி வரும் தமிழக அரசு திட்டங்களின் பயன்களை மக்கள் பெறும் வகையில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற புதிய திட்டத்தை கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சாதிச் சான்றிதழ், பட்டா பெயர் மாற்றம், ஆதார், ரேஷன் அட்டையில் திருத்தம் உள்ளிட்ட சேவைகள் இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்படுகின்றன. மேலும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் உங்கள் மாவட்டங்களில் முகாம் நடைபெறவுள்ள இடத்தின் விவரங்களை அறிய https://ungaludanstalin.tn.gov.in என்ற பிரத்யேக இணையதளத்தை தொடங்கியுள்ளது தமிழ்நாடு அரசு. இந்த நிலையில், முதலமைச்சர் அவர்கள் சிதம்பரத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை தொடங்கி வைத்து, ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே, 3 கோரிக்கை மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது.
காதொலி கருவி வேண்டி விண்ணப்பித்த சபரீஷ் என்ற மாற்றுத்திறனாளி பயனாளிக்கு காதொலி கருவியையும், மருத்துவ காப்பீட்டு அட்டை வேண்டி விண்ணப்பித்த திருமதி செந்தமிழ் செல்வி என்ற பயனாளிக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீட்டு அட்டையும், மின்சார இணைப்பு பெயர் மாற்றம் வேண்டி விண்ணப்பித்த பெருமாள் என்ற பயனாளிக்கு மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கான ஆணையினையும் முதலமைச்சர் வழங்கினார்.மேலும், “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் வேளாண்மை – உழவர் நலத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை போன்ற பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் திட்டங்களை விளக்கி அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளை முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டார்.
The post “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்திற்கென பிரத்யேக இணையதளம்.. முதலமைச்சர் மேற்பார்வையில் ‘ஒரு மணி நேரத்திற்குள் பயன்’ பெற்ற மக்கள்! appeared first on Dinakaran.