உசிலம்பட்டி : உசிலம்பட்டி அருகே ஆடித்திருவிழாவை முன்னிட்டு, மாபெரும் கிடா முட்டு போட்டி ரசிகர்களின் உற்சாக பங்கேற்புடன் நடைபெற்றது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ராஜக்காபட்டியில் சமைய கருப்பசாமி கோயிலின் ஆடித்திருவிழாவை முன்னிட்டு, நேற்று கிடா முட்டு போட்டி விமர்சையாக நடைபெற்றது.
இதற்காக உயர் நீதிமன்ற பரிந்துரைப்படி மாவட்ட கலெக்டரிடம் ஒப்புதல் பெறப்பட்டு, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் இப்போட்டி நடைபெற்றது.
இதில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து செவலை மறை, வெள்ளை கொங்கு, குட்டை கருமறை, குரும்பை உள்ளிட்ட பல்வேறு வகையான 40க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்றன.
போட்டியில் நேருக்கு நேர் மோதிக் கொண்டது, ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்நிகழ்வில் உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன், திமுக செயற்குழு உறுப்பினர் இளமகிழன், ராஜக்காபட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா பால்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற கிடாக்களின் உரிமையாளர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
The post உசிலம்பட்டி அருகே ஆடித்திருவிழாவில் கிடாமுட்டு appeared first on Dinakaran.