புது டில்லி: உணவுப் பொருட்களின் விலையேற்றத்தினால் நாட்டில் மார்ச் மாத சில்லறை பணவீக்கம் 6.95 சதவீதத்தை தொட்டுள்ளது.
இது கடந்த 17 மாதங்களுக்கு பின் உச்ச நிலை ஆகும். பணவீக்கத்தை கட்டுப்படுத்த ஜூன் மாதம் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தக் கூடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பணவீக்கத்தை நடுத்தர கால அளவில் 4 சதவீதமாகவும், பணவீக்க உச்ச வரம்பை 6 சதவீதத்திற்குள் பராமரிக்க ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் தொடர்ந்து 3வது மாதமாக பணவீக்கமானது ரிசர்வ் வங்கியின் இலக்கை காட்டிலும் அதிகரித்தப்படியே உள்ளது.
பிப்ரவரி மாதம் 6.07 சதவீதமாக இருந்த சில்லறை பணவீக்கம் 6.95 சதவீதமாக உயர்ந்துள்ளது. இறைச்சி, மீன் மற்றும் குளிர்பானங்கள் போன்றவற்றின் விலை எதிர்பார்த்ததை விட அதிகம் உயர்ந்ததால் இந்த அளவிற்கு மார்ச் மாத சில்லறை பணவீக்கம் உயர்ந்ததாக கூறுகின்றனர
இது பற்றி பொருளாதார நிபுணர்கள் கூறியதாவது: மார்ச் மாத சில்லறை பணவீக்கம் எதிர்பார்ப்புகளை தாண்டி 17 மாத உச்சமாக 6.95 சதவீதத்தை தொட்டுள்ளது. கடந்த 3 காலாண்டாக பணவீக்கம் 6 சதவீதத்தை தாண்டியுள்ளதால் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு இது குறித்து பாராளுமன்றத்திடம் விளக்கமளிக்க வேண்டும்.
மேலும் ஜூன் மாதம் ரிசர்வ் வங்கி உயர்த்தாமல் வைத்திருக்கும் வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்த அதிக வாய்ப்பு உண்டு. வளர்ச்சியை விட பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதே ரிசர்வ் வங்கியின் முதன்மை நோக்கமாக தற்போது உள்ளது.