கோவை: கோவை தேக்கம்பட்டி ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் தங்கராஜ் பேன்ட் பாக்கெட்டில் இருந்த ரூ.1 லட்சம் திருடப்பட்டுள்ளது. பேன்ட் பையை பிளேடால் கிழித்து கைவரிசை காட்டிய மர்மநபரை மேட்டுப்பாளையம் போலீசார் தேடி வருகின்றனர்.
2026 சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பிரச்சார சுற்றுப்பயணத்தை இன்று துவங்கினார். கோவை மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.
வனபத்ரகாளியம்மன் ஆலயத்தின் அருகில் உள்ள தனியார் அரங்கில் விவசாயிகள், நெசவாளர்கள் மற்றும் செங்கல் சூளை உற்பத்தியாளர்களை சந்தித்து எடப்பாடி கலந்துரையாடினார். அப்போது எடப்பாடியை சந்திக்க வந்த கோவை தேக்கம்பட்டி ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் தங்கராஜ் அரங்கத்திற்கு வெளியே காத்திருந்தார்.
அப்போது கண் இமைக்கும் நேரத்தில் தங்கராஜ் பேன்ட் பாக்கெட்டில் இருந்த ரூ.1 லட்சத்தை மர்ம நபர் பிக்பாக்கெட் அடித்து சென்றுள்ளார். தனது 2 பாக்கெட்டில் ஒவ்வொரு லட்சம் பணம் வைத்திருந்ததாகவும், அதில் பிளேடால் கிழித்து திருட முயன்றது தெரிய வந்துள்ளது. ஒரு பாக்கெட்டில் இருந்த 1 லட்ச ரூபாயை மட்டும் மர்ம நபர் திருடி சென்ற நிலையில், மற்றொரு பாக்கெட்டில் வைத்திருந்த பணம் கீழே விழுந்துள்ளது.
இதனையடுத்து விழுந்த பணத்தை எடுத்த பின்பு மற்றொரு பாக்கெட்டில் வைத்திருந்த பணம் திருடப்பட்டது அவருக்கு தெரியவந்துள்ளது. பின்னர் இதுகுறித்து மேட்டுப்பாளையம் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் பிக்பாக்கெட் அடித்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
The post எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்துக்கு வந்திருந்த அதிமுக நிர்வாகியிடம் ரூ.1 லட்சம் பிக்பாக்கெட் அடிக்கப்பட்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.