ஏரல்: ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் ஆடி அமாவாசை திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இக்கோயில் ஆடி, தை மாத அமாவாசைகள் கொடியேற்றத்துடன் தொடங்கி திருவிழா 12 நாட்கள் நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழா இன்று காலை கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. இதனை முன்னிட்டு சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கோயில் முன்மண்டபத்தில் உள்ள வெள்ளி கொடிமரத்தில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டிய நாடார் கொடியேற்றி வைத்தார். இதனையடுத்து பக்தர்களுக்கு கோயில் பிரசாதம் மற்றும் டிபன் சாப்பாடு வழங்கப்பட்டது.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சேர்மன் அருணாசல சுவாமியை தரிசனம் செய்தனர். இன்று இரவு 8 மணிக்கு கேடயசப்பரத்தில் அருணாசல சுவாமி திருக்கோலம் கோயில் வலம் வரும் நிகழ்ச்சியும், ஏரல் நாராயண கம்பரின் நாதஸ்வர நிகழ்ச்சியும் நடக்கிறது. 16ம்தேதி (நாளை) காலை சேர்ம விநாயகர் திரு உலா, இரவு 8 மணிக்கு திரு ஆல் வாகனத்தில் குறி சொல்லும் கூத்தன் அலங்காரத்தில் திருக்கோயில் வலம் வருதல், 17ம்தேதி இரவு 8 மணிக்கு முல்லை சப்பரத்தில் சதாசிவமூர்த்தி அலங்காரம் கோயில் வலம் வரும் நிகழ்ச்சி, 18ம்தேதி இரவு 7 மணிக்கு பொம்மலாட்டம் நிகழ்ச்சி, இரவு 8 மணிக்கு பூங்குயில் சப்பரத்தில் நடராஜர் அலங்காரம் கோயில் வலம் வருதல் நடக்கிறது.
19ம்தேதி இரவு 8 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு திருப்புன்னை சப்பரத்தில் நவநீதகிருஷ்ண அலங்காரம் கோயில் வலம் வருதலும், 20ம்தேதி இரவு 8.30 மணிக்கு ஏகசிம்மாசன சப்பரத்தில் பாலசேர்மன் அலங்காரம் கோயில் வலம் வருதல், இரவு 9 மணிக்கு நாதஸ்வர, சிறப்பு தவுல் வாசிப்பு நிகழ்ச்சியும், 21ம்தேதி இரவு 7.30 மணிக்கு குழலிசையில் பக்தி இன்னிசை நிகழ்ச்சி, இரவு 8.30 மணிக்கு பல்லக்கில் தவழ்ந்த கிருஷ்ணத் திருக்கோலம் கோயில் வலம் வரும் நிகழ்ச்சியும், 22ம்தேதி இரவு 8 மணிக்கு வில்வச்சப்பரத்தில் ராஜாங்க அலங்காரம் கோயில் வலம் வருதல், இரவு 9 மணிக்கு நாதஸ்வரம், சிறப்புத் தனித்தவில் வாசிப்பு நிகழ்ச்சியும், 23ம்தேதி இரவு 7 மணிக்கு சின்ன சப்பரத்தில் பிச்சாண்டவ மூர்த்தி கோலம் கோயில் மற்றும் ஏரல் நகர்வீதி வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழா காலங்களில் தினசரி காலை சேர்ம விநாயகர் திரு உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
முக்கிய ஆடி அமாவாசை திருவிழா 24ம்தேதி வியாழக்கிழமை நடக்கிறது. அன்று பகல் 1 மணிக்கு சுவாமி உருகு பலகையில் கற்பூரவிலாசம் வரும் காட்சி, சிறப்பு அபிஷேக ஆராதனையும், மாலை 5 மணிக்கு இலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்மத் திருக்கோலம், இரவு 11 மணிக்கு 1ம் காலம் கற்பகப் பொன் சப்பரத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. இவ்விழாவில் தமிழகமெங்கும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்த கலந்து கொள்கிறார்கள். 25ம்தேதி காலை 4 மணிக்கு 2ம் காலம் வெள்ளை சாத்தி தரிசனம், காலை 9 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், பகல் 1 மணிக்கு 3ம் காலம் பச்சை சாத்தி தரிசனம், மாலை 6 மணிக்கு ஏரல் அருள்மிகு சவுக்கை முத்தாரம்மன் கோயில் பந்தலில் தாகசாந்தி, இரவு 10.30 மணிக்கு சுவாமி கோயில் மூலஸ்தானம் வந்து சேரும் ஆனந்த காட்சி, திருக்கற்பூர தீப தரிசனம் நடக்கிறது.
ஆடி அமாவாசை திருவிழா நிறைவு நாள் விழா 26ம்தேதி நடக்கிறது. அன்று காலை 8 மணிக்கு தீர்த்தவாரி பொருநை நதியில் சகல நோய் தீரும் திருத்துறையில் நீராடலும், பகல் 12.30 மணிக்கு அன்னதானம், பகல் 3 மணிக்கு ஆலிலைச் சயன அலங்காரம், மாலை 6 மணிக்கு ஊஞ்சல் சேவை, இரவு 9 மணிக்கு திருவருள் புரியும் மங்கள தரிசனம் நடக்கிறது. பக்தர்கள் வசதிக்காக நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர் உட்பட முக்கிய ஊர்களில் இருந்து கோயில் சென்று வருவதற்கு அரசு போக்கு வரத்து கழகத்தில் இருந்து திருவிழா சிறப்பு பஸ்கள் விடப்பட உள்ளது. பக்தர்களுக்கு குடிநீர், மின்விளக்கு, சாலை வசதி உட்பட அனைத்து ஏற்பாடுகளையம் கோயில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ. கருத்தப்பாண்டிய நாடார் செய்து வருகிறார்.
The post ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது: திரளான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.