திருவாரூர்: வேலை உறுதி திட்டத்துக்கு நிதி ஒதுக்காத ஒன்றிய அரசை கண்டித்து திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உட்பட பல்வேறு இடங்களில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு கடந்த 4 மாத சம்பளம் ஊதிய நிலுவைத்தொகை ரூ.4,034 கோடியை ஒன்றிய அரசு உடனே வழங்க கோரியும், வேலை மறுக்கப்பட்ட நாட்களுக்கு படித்தொகை வழங்க வேண்டும். 100 நாள் திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து தினக்கூலியாக ரூ.700 வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் 150 இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஊராட்சி அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் முன் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன்படி திருவாரூர் ஒன்றியம் அலிவலம் ஊராட்சி அலுவலகம் முன் சங்க ஒன்றிய செயலாளர் சித்திரைகனி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதேபோல் கூடூர், மாங்குடி, புலிவலம், சேமங்கலம், கள்ளிக்குடி பழவனக்குடி ஆகிய ஊராட்சி அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. அபிவிருத்தீஸ்புரம் ஊராட்சி அலுவலகம் முன் கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன் தலைமையிலும், திருத்துறைப்பூண்டியில் ஒன்றிய செயலாளர் மகாலிங்கம் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டம் முழுவதும் 89 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாகை மாவட்டத்தில் நாகை, கீழ்வேளூர் உட்பட 4 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மயிலாடுதுறையில் கிட்டப்பா அங்காடி முன் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலானர் நீதி சோழன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தஞ்சை தலைமை தபால் நிலையம் முன் மாவட்ட துணை செயலாளர் குணசேகரன் தலைமையில் விவசாய ெதாழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதேபோல் கும்பகோணம், ஒரத்தநாடு, பட்டுக்கொட்டை மற்றும் டல்டா மாவட்டங்களில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
The post ஒன்றிய அரசைக் கண்டித்து டெல்டாவில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.