*பொதுமக்கள் எதிர்பார்ப்பு
கடலூர் : கடலூர் நகரின் முக்கிய நீர் நிலையாக இடம் பிடித்துள்ள கெடிலம் ஆற்றின் கரைகளை பலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கெடிலம் ஆறு தமிழகத்தின் கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் வழியாகப் பாயக்கூடிய ஆறு ஆகும். இது ஒப்பீட்டளவில் சிறிய ஆறு ஆகும். சங்கராபுரம் மையனூரில் உற்பத்தியாகி, மலட்டாற்றுடன் சேர்ந்து கடலூர் அருகே வங்கக்கடலில் ஐக்கியமாகிறது.
மழைக்காலங்களில் பெருக்கெடுத்தோடும் இந்த ஆறு இதன் சுற்றுப்புறத்தில் நிலத்தடி நீர் மட்டம் உயர உதவுகிறது. இந்த ஆற்றில் பொதுவாக பருவ மழைக்காலத்தில் நீர் வரத்து இருக்கும்.இதன் காரணமாக நிலத்தடி நீர் மட்டமானது உயர்வதோடு, இதன் படுகையில் உள்ள நீர் நிலைகளும் நிரம்புகின்றன.
இந்த ஆற்றின் கரையில் திருவதிகை வீரட்டானேஸ்வர் கோயில், திருவந்திபுரம் தேவநாதசாமி கோயில் போன்ற புகழ்பெற்ற சில கோயில்கள் அமைந்துள்ளன. தேவாரம் போன்ற இடைக்கால பக்தி இலக்கியங்களிலும் இந்த ஆறு குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறப்பு வாய்ந்த இந்த கெடிலம் ஆற்றின் பல்வேறு இடங்களில் கரைகள் பலவீனத்தால் மழைக்காலங்களில் உடைப்பு ஏற்பட்டு வருகிறது.
இதைதொடர்ந்து கெடிலம் ஆற்றின் கரைகள் பலப்படுத்துதல், ஆற்றில் உள்ள முட்புதர்கள் அகற்றுதல் என பல்வேறு பணிகள் மேற்கொள்வதற்கு நிதி ஒதுக்கப்பட்டது.
ஆனால் கோடிகளில் ஒதுக்கீடு பெற்றும் தரமற்ற பணியால் ஆற்றின் நிலையில் மாற்றம் இல்லாமல் மழைக்காலங்களில் கரைகள் உடைப்பு ஏற்படுவது தொடர்கதையாகவே உள்ளது. இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு தொடர் மழை காரணமாக 1 லட்சம் கன அடிக்கு கடலூர் பகுதி கெடிலம் ஆற்றில் தண்ணீர் சென்றது.
வழக்கமான உடைப்பால் நகரின் பல்வேறு இடங்களில் ஆற்று நீர் புகுந்தது. இதைதொடர்ந்து மீண்டும் கரைகள் பலப்படுத்துதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. கடலூர் திருவந்திபுரம் முதல் கெடிலம் நதி கலக்கும் முகத்துவாரம் வரை ஆற்றின் கரைகள் பலப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும் இனி ஆற்றில் 1 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்தாலும் கரைகள் கரையாது என்று சம்பந்தப்பட்ட துறையினர் தெரிவித்தனர்.
இதனால் கடலூர் நகர் மற்றும் புறநகர் பகுதியில் கெடிலம் ஆற்று வெள்ளம் ஒன்றும் செய்யாது என மக்கள் பெருமூச்சு விட்டனர். இதற்கிடையே கற்கள் பதிக்கப்பட்ட கரை பகுதியில் கூட உடைப்பு ஏற்பட்டது.
கடலூர் அண்ணா மேம்பாலம், கம்மியம்பேட்டை பாலம் ஆகியவை கெடிலம் ஆற்றின் மேலே கட்டப்பட்ட பாலங்கள் ஆகும். இந்நிலையில் கம்மியம்பேட்டை பாலத்தின் இருபுறமும் ஏராளமான முட்செடிகள் வளர்ந்து புதர் போல் காட்சியளிப்பதோடு, இருபுறமும் கரைகள் பலவீனமாக இருக்கிறது.
இதனால் நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டிய மழை நீர், வீணாக கடலில் சென்று கலக்கிறது. பாலத்தின் இருபுறமும் உள்ள தடுப்பு சுவர்கள் மிகவும் சேதமடைந்து பலவீனமாக காட்சியளிக்கிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இந்த வழியாக செம்மண்டலம், புதுச்சேரி, புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் ஆகிய பகுதிகளுக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த வாகன ஓட்டிகள் அந்த வழியாக செல்லும் போது அச்சமடைகின்றனர். மேலும் மழைக்காலங்களில் கடலூரில் வெள்ளம் ஏற்படும் நிலை உள்ளது. தற்போது மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் கெடிலம் ஆற்றின் கரைகளை பலப்படுத்தி முட்செடிகளை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
The post கடலூர் நகரின் முக்கிய நீர் நிலையாக உள்ள கெடிலம் ஆற்றின் கரைகளை பலப்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.