கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஸ்கேன் செய்து குழந்தை ஆணா, பெண்ணா என்பதை திருப்பத்தூர் மாவட்ட பகுதிகளில் உள்ள சில கிளினிக்குகளில் கூறுவதாகவும், அதற்காக பணம் பெறுவதாகவும் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவின் பேரில், மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் ரமேஷ்குமார் தலைமையிலான குழுவினர் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு கர்ப்பிணிகளுடன் சென்றனர். அங்கு மாவட்ட சுகாதார அலுவலர் வினோத்குமாருடன் இணைந்து ஆய்வு செய்தனர். அப்போது அங்கு டூவீலரில் வந்த நபர், ஆதார் அட்டையுடன் சேலத்திற்கு செல்லுமாறு கூறினார். இதை தொடர்ந்து அதிகாரிகள் குழுவினர், நேற்று முன்தினம் மாலை சேலம் சென்றனர். அங்கு அவர்களை சந்தித்த இடைத்தரகர்கள், சேலம் வீராணம் பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு வீராணம் கோழிப்பண்ணை பஸ் நிறுத்தம் அருகில், பசுபதி ஸ்கேன் மையம் என்ற கிளினிக்கில், கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்று கண்டறிந்து தெரிவிக்கும் பணிகள் நடந்தது தெரியவந்தது. மேலும், ஆச்சாங்குட்டப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் முத்தமிழ், தெடாவூர் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் கலைமணி ஆகிய 2 பேரும், இந்த கிளினிக்கை நடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆய்வில் நாமக்கல் மாவட்டம், திருச்சி மாவட்டம் முசிறி, ஈரோடு மாவட்டம் சடையம்பாளையத்தை சேர்ந்த 3 பெண்ணுக்கு கருவில் உள்ள பாலினத்தை அறிய தலா ரூ15 ஆயிரம் வசூலித்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அங்கிருந்த ஸ்கேன் மெஷினை பறிமுதல் செய்தனர். மேலும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், 5 இடைத்தரகர்கள் மீது வீராணம் போலீசில் புகார் செய்தனர்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து விதிமுறையை மீறி செயல்பட்ட ஸ்கேன் சென்டருக்கு அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர். மேலும் அரசு மருத்துவர் முத்தமிழ், செவிலியர் கலைமணி, உடந்தையாக செயல்பட்ட கிராம சுகாதார செவிலியர் அம்பிகா ஆகிய 3 பேரை சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
The post கர்ப்பிணிகளிடம் ரூ15 ஆயிரம் வாங்கிக்கொண்டு கருவில் உள்ள பாலினத்தை தெரிவித்த அரசு டாக்டர், 2 நர்சுகள் சஸ்பெண்ட்: ஸ்கேன் சென்டருக்கு சீல் appeared first on Dinakaran.