* சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்
அருமனை: கிள்ளியூர் தொகுதிக்கு உள்பட்ட பறக்காணி, வைக்கலூர் ஆகிய பகுதிகளில் தாமிரபரணி ஆறு செல்லும் பகுதி உள்ளது. இந்த ஆற்றின் கரையில் தற்போது மண் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. இன்னும் அதிக அளவில் மண் அரிப்பு ஏற்பட்டால் வீடுகள் இடிந்து விழும் அபாயம் ஏற்படும் என்பது குறிபிடத்தக்கது. ஆகவே சிற்றாறு 2 அணை பகுதியில் இருந்து மண் எடுத்து வந்து தற்காலிக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு, பொதுப்பணித்துறையினருக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மொத்தம் 8 யுனிட் மணல் எடுத்து சிறு சிறு மூட்டைகளாக கட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதன்படி பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோர் லாரிகளில் கடந்த 12ம் தேதி அதிகாலை சுமார் 2 மணிக்கு சிற்றாறு 2 அணை பகுதிக்கு மண் எடுக்க சென்றுள்ளனர். சில லாரிகள் மணலுடன் சென்று விட்டன.
இன்னும் சில லாரிகளில் மணல் ஏற்றிக் கொண்டு இருந்தனர். இதற்கிடையே மண் எடுக்கும் தகவல் அறிந்ததும் களியல் தெங்கம்புதூர் பகுதியை சேர்ந்த நகர பாஜ தலைவர் செல்வின் சிற்றாறு 2 அணை பகுதிக்கு சென்று இருக்கிறார். தொடர்ந்து அங்கு மண் எடுத்துக் கொண்டிருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஊழியர்களிடம் மண் எடுக்க கூடாது என்று கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். உடனே பொதுப்பணித்துறை அதிகாரிகள், தாமிரபணி ஆற்றின் கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. இன்னும் கொஞ்சம் அதிகமாக மண் அரிப்பு ஏற்பட்டால் கரையோர பகுதிகளில் உள்ள வீடுகள் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது. ஆகவே இங்கிருந்து மண் எடுத்து சாக்குமூடைகளில் அடைத்து மண் அரிப்பை தடுப்பதற்காக மட்டுமே சிற்றாறு 2 அணையில் இருந்து மண் எடுத்து கொண்டு இருக்கிறோம்.
வேறு சட்டவிரோதமாக எடுக்கவில்லை என்று பல மணிநேரம் விளக்கம் கொடுத்து இருக்கின்றனர். இது தவிர கலெக்டர், எஸ்பி ஆகியோரின் அனுமதியின் பேரில் தான் மண் எடுக்கப்படுகிறது என்றும் கூறி உள்ளனர். குறிப்பாக இரவு நேரங்களில் மண் எடுக்க வேண்டாம் என்று உயர் அதிகாரிகள் கேட்டுக் கொண்டதால் அதிகாலை மண் எடுக்கிறோம் என்றும் கூறி உள்ளனர். இருப்பினும் பாஜ நகர தலைவர் செல்வின், அதிகாரிகளின் விளக்கம் எதையும் காது கொடுத்து கேட்கவிலை. மாறாக மண் ஏற்றிக் கொண்டு இருந்த லாரியை நிறுத்தியதோடு, அதிகாரிகளிடம் தொடர்ந்து வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. அப்போது ஆத்திரம் அடைந்தவர் ஒரு கட்டத்தில் அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் மிரட்டும் தோணியில் பேசியதாகவும் கூறப்படுகிறது. அதிகாரிகள் மறுபடியும் விளக்கம் கொடுத்தும் அவர் கேட்கவில்லையாம். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தற்போது பாஜ பிரமுகர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் பாஜ தலைவர் நுழைந்தது எப்படி?
சிற்றாறு அணை 2 பகுதி பாதுகாக்கப்பட்டது. அவ்வளவு சீக்கிரமாக இந்த பகுதிக்குள் யாரும் சென்று விட முடியாது. ஆனால் பாதுகாக்கப்பட்ட பகதிக்குள் யாருடைய அனுமதியும் இல்லாமல் பாஜ நகர தலைவர் செல்வின் அதிகாலை 2 மணிக்கு அந்த பகுதிக்கு எப்படி வந்தார் என்பது தான் தற்போதைய கேள்வி. அணை பகுதியை சேர்ந்த யாராவது அவருக்கு தகவல் கொடுத்து இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இல்லை என்றால் ஊழியர்களின் ஆதரவோடு அவ்வப்போது செல்வின் பாதுகாக்பபட்ட பகுதிக்கு ரகசியமாக வந்து செல்வாரா? என்ற கேள்வியும் எழுந்து இருக்கிறது. இது தொடர்பாக பொதுப்பணித்துறை உதவி அலுவலர்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர். அவர்கள் பாதுகாக்கப்பட்ட சிற்றாறு 2 பகுதிக்குள் செல்வின் எப்படி சகஜமாக நுழைந்தார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
The post கலெக்டர், எஸ்பி அனுமதியின் பேரில் சிற்றாறு 2 அணையில் மண் எடுத்த அதிகாரிகளை மிரட்டிய பாஜ தலைவர்: பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் appeared first on Dinakaran.