சென்னை: திமுக மாணவர் அணியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் வளாகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பின்னர் திமுக மாணவர் அணி செயலாளர் ராஜீவ் காந்தி அளித்த பேட்டி: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வரும் நிதியில் இருந்து கல்வி இயக்கங்கள் ஆரம்பிக்கக் கூடாது என தமிழர்களின் கல்வியை கொச்சைப்படுத்தும் எடப்பாடி பழனிசாமியை கண்டிக்கிறோம். திமுக மாணவர் அணி சார்பில் தொடர்ச்சியாக கல்வி உரிமைகள் இயக்கம் நடத்தப்படும்.
தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் தனியார் கல்லூரி நிறுவனங்கள் வாயிலாக தமிழ் மாணவர் மன்றம் அமைப்பது மட்டுமில்லாமல், இயங்கி வரும் மன்றத்தினை விரிவுபடுத்தி, உள்ளுக்குள் திராவிட இயக்கம், தமிழ் உணர்வு மற்றும் தமிழ்நாட்டின் உரிமைகளை பேசும் பொருளாகி மாணவர்களிடையே கொண்டு செல்லப்படும்.
அதன் அடிப்படையில், அடுத்த வாரத்திலிருந்து ஓரணியில் தமிழ்நாடு என்ற இயக்கத்தை முன்னெடுத்துள்ள முதல்வரின் கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் அனைத்து கல்லூரி வாயிலாக திமுக மாணவரணி சார்பில் ஒரு கொள்கை பிரசாரம் மேற்கொள்ளப்படும். இதில் இளைஞர்கள் சேர வேண்டும் என்பதற்காக கல்லூரி வளாகங்களுக்கு முன்பு மாணவரணி துண்டு அறிக்கைகளை வழங்கி திமுகவில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
* கோவையில் 14ம் தேதி ஆர்ப்பாட்டம்
திமுக மாணவர் அணிச் செயலாளர் இரா.ராஜீவ் காந்தி நேற்று வெளியிட்ட அறிவிப்பு: கல்விக்காக திராவிட மாடல் அரசு எடுக்கும் முன்னெடுப்புகளை கொச்சைப்படுத்தும் விதமாக கோவையில் பேசியுள்ள எடப்பாடி பழனிசாமியை கண்டித்து திமுக மாணவர் அணி சார்பில் வரும் 14ம் தேதி பிற்பகல் 2.30 மணி அளவில், கோவை, டாடாபாத், சிவானந்தா காலனியில் திமுக மாணவர் அணி செயலாளர் இரா.ராஜீவ் காந்தி தலைமையில் மாணவர் அணி மாநில துணைச் செயலாளர்கள் மன்னை சோழராஜன், சேலம் தமிழரசன், அதலை செந்தில்குமார், தமிழ் அமுதரசன், ஆனந்த், கோகுல், பூர்ண சங்கீதா சின்னமுத்து, வீரமணி, ராமகிருஷ்ணன் முன்னிலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
The post கல்வியை கொச்சைப்படுத்திய எடப்பாடிக்கு கண்டனம் தமிழகம் முழுவதும் கல்வி உரிமை இயக்கம்: திமுக மாணவர் அணி செயலாளர் பேட்டி appeared first on Dinakaran.