
கோவை: “21 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடத்தப்படுகிறது. திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் எஸ்ஐஆர் என்றாலே அலறுகிறார்கள். தகுதியானவர்கள் மட்டும் இடம்பெற்றால் கள்ள ஓட்டு போடமுடியாது என திமுகவினர் இதனை எதிர்க்கிறார்கள். தகுதியானவர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்பதற்காகவே நாங்கள் எஸ்ஐஆரை ஆதரிக்கிறோம்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “கோவையில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். திமுக ஆட்சியில் பெண்கள், மாணவிகள், சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை. திமுக ஆட்சியில் பாலியல் வன்கொடுமைகள் சர்வசாதாரணமாக நடக்கின்றன. காவல்துறை மீது குற்றவாளிகளுக்கு பயமே இல்லை. இப்போது அரசாங்கம் இருக்கிறதா என்ற கேள்வி மக்களிடத்தில் எழுந்துள்ளது. சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது.

