திருப்பூர்: காதல் மனைவி சிக்கன் சாப்பிட மறுத்ததால், புதுமாப்பிள்ளை தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த சாக்கோட்டை புதுப்பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (29). இவர் அங்குள்ள பர்னிச்சர் கடையில் வேலை செய்தபோது, தன்னுடன் வேலை செய்து வந்த சுபலட்சுமி (25) என்பவரை காதலித்து இருதரப்பு பெற்றோர் எதிர்ப்பையும் மீறி சென்னையில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டார்.காதல் தம்பதியினர் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அடுத்த குட்டகாட்டு புதூரில் உள்ள சுபலட்சுமியின் சகோதரி மேனகாவின் வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில், மேனகாவுடன் அவருடைய கணவரும் கோயில் திருவிழாவிற்காக நேற்று திருச்சி சென்றிருந்தனர்.
அப்போது மணிகண்டன் கடையில் சிக்கன் வாங்கி வந்து சுபலட்சுமியை சாப்பிட வற்புறுத்தியுள்ளார். ஆனால் தனது சகோதரி கோயிலுக்கு சென்று இருப்பதால், வீட்டில் சிக்கன் சாப்பிட சுபலட்சுமி மறுத்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மணிகண்டன் வீட்டின் விட்டத்தில் உள்ள இரும்பு கம்பியில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டார். இதையறிந்த அவரது மனைவி சுபலட்சுமி அருகில் இருந்தவர்கள் உதவியுடன் மணிகண்டனை மீட்டு கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு மருத்துவர் பரிசோதனை செய்துவிட்டு மணிகண்டன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post காதல் மனைவி சிக்கன் சாப்பிட மறுப்பு: புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.