*மாநகராட்சிக்கு கோரிக்கை
நாமக்கல் : கொண்டிசெட்டிப்பட்டி ஏரியில், கழிவு நீர் நேரடியாக கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாய முன்னேற்ற கழகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது குறித்து விவசாய முன்னேறக்கழக மாநில பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியம், நாமக்கல் மாநகராட்சி கமிஷனருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மோகனூர் மெயின் ரோட்டில், மாநகராட்சிக்கு சொந்தமான கொண்டிசெட்டிபட்டி ஏரி உள்ளது.
இந்த ஏரி மிகவும் புகழ்வாய்ந்த ஏரியாகும். மேலும் அப்பகுதியில் விவசாய தோட்டங்களில் உள்ள கினறுகள் மற்றும் பொதுமக்களின் வீடுகளில் உள்ள போர்வெல்களுக்கு, இந்த ஏரி தண்ணீரே நீராதாரமாக விளங்கி வருகிறது.
அப்பகுதி மக்கள் தினந்தோறும் காலையிலும், மாலையிலும் அந்த ஏரி கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஏரிக்கரையில் அரசு தொடக்கப்பள்ளியும், சிறுவர் பூங்காவும் அமைந்துள்ளது.
இந்நிலையில், அந்த ஏரியில் நாமக்கல் மாநகராட்சி கழிவுகள் நேரடியாக வந்து கலக்கிறது. இதனால் அடிக்கடி ஏரியில் மீன்கள் செத்து மிதந்து, கடும் துர்நாற்றம் வீசுகிறது.
கொண்டிசெட்டிப்பட்டி ஏரியில் கழிவு நீர் கலப்பதை மாநகராட்சி உடனடியாக தடுத்து நிறுத்தாவிட்டால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் உருவாகும் அபாயம் உள்ளது. எனவே, அந்த ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்த, மாநகராட்சி நிர்வாகம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
The post கொண்டிசெட்டிப்பட்டி ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் appeared first on Dinakaran.