கோவை: கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி காவலில் எடுக்கப்பட்ட டெய்லர் ராஜாவிடம் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 58 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 250க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 150க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 29 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கோவையை சேர்ந்த சாதிக் என்கிற டெய்லர் ராஜாவை கடந்த 9ம் தேதி, கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் கோவை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர் கோவைக்கு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் 7 நாட்கள் அனுமதி கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதி வெர்ஜினி வெஸ்டா 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். 21ம் தேதி மாலை 5 மணிக்கு கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். இதையடுத்து கோவை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் டெய்லர் ராஜாவை பலத்த பாதுகாப்புடன் சித்ராவில் உள்ள தீவிரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு விசாரணையை தொடங்கினர். விசாரணையின்போது அவரிடம் கர்நாடக மாநிலத்தில் அவர் எங்கேல்லாம் தங்கிருந்தார். 29 வருடங்கள் தலைமறைவாக இருக்க அவருக்கு யார் எல்லாம் உதவினார்கள்? தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தாரா? என்பது குறித்து பல்வேறு கேள்விகளை கேட்டு வருகின்றனர்.
டெய்லர் ராஜா கர்நாடகா மாநிலத்தில் இருந்த இடங்களின் விவரங்களை சேகரித்து கர்நாடகா மாநில போலீசாரிடமும் சில ஆவணங்களை பெற போலீசார் முடிவு செய்துள்ளனர்.
டெய்லர் ராஜா கர்நாடகாவில் பதுங்கி இருந்தபோது திருமணம் செய்து 3 குழந்தைகள் உள்ளனர். இதனால் அவரது குடும்பத்தினருக்கு இவரது பின்னணி குறித்து தெரியுமா? என்பது குறித்தும் விசாரிக்கின்றனர். மேலும், குண்டு வெடிப்பு வழக்கில் தற்போது வரை தலைமறைவாக உள்ள முஜிபூர் ரகுமான் அவருடன் தொடர்பில் இருந்தாரா?, அவரை குறித்த தகவல்கள் உள்ளதா? என்பதும் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை அனைத்தையும் போலீசார் வீடியோவாக பதிவு செய்து வருகின்றனர்.
The post கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது: காவலில் எடுக்கப்பட்ட டெய்லர் ராஜாவிடம் தீவிர விசாரணை appeared first on Dinakaran.