சொராபுதீன் போலி என்கவுன்ட்டர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 22 காவலர்களையும் விடுவித்து மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. போலி என்கவுன்ட்டரில் தொடர்புடைய காவலர்களைக் குற்றவாளிகளாக அறிவிப்பது சுலபமான காரியமல்ல. அதிலும், செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்களும் காவல் துறை உயரதிகாரிகளும் குற்றம்சாட்டப்பட்ட ஒரு வழக்கில் இன்னமும் கடினமான விஷயம்தான். எனினும், குற்றம்சாட்டப்பட்ட 22 பேரும் குற்றமற்றவர்கள் என்று நீதிமன்றம் முடிவுக்குவந்திருப்பது நீதி மற்றும் விசாரணை அமைப்புகளின் தோல்வி என்றே சொல்ல வேண்டும்.
இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, ஐபிஎஸ் அதிகாரிகள் ஆகியோர் இவ்வழக்கிலிருந்து முன்பே விடுவிக்கப்பட்ட நிலையில், 22 காவலர்களும் விடுவிக்கப்பட்டிருப்பதில் ஆச்சரியமில்லை. இவ்வழக்கின் 210 சாட்சிகளில், 92 பேர் பிறழ்சாட்சிகளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ‘‘உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்காக வருத்தப்படுகிறேன். எனினும், ஆதாரங்களின் அடிப்படையிலேயே நீதிமன்றங்கள் செயல்படுகின்றன’’ என்று தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கும் நீதிபதி ஜே.எஸ்.சர்மா, சாட்சிகள் தங்கள் சாட்சியங்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டால், அதை சிபிஐயின் தவறாகக் கருத முடியாது என்றும் கூறியிருக்கிறார். ஆனால், சாட்சிகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதுடன், உண்மையின் பக்கம் தொடர்ந்து நிற்க அவர்களுக்கு நம்பிக்கையையும் துணிச்சலையும் அளிக்க வேண்டியது அரசுத் தரப்பின் கடமை. காவல் துறை தரப்பைச் சேர்ந்த சாட்சிகள், அரசுத் தரப்புக்கு ஆதரவாகச் சாட்சி சொல்லாததில் வியப்பில்லை. ஆனால், மற்றவர்களும் பிறழ்சாட்சிகளாகிவிட்டதுதான் ஆச்சரியம். சொராபுதீன், அவரது மனைவி கவுசர் பி, உதவியாளர் துளசிராம் பிரஜாபதி ஆகியோரும் போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட பேருந்தின் ஓட்டுநரும் ஒரு பயணியும் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று மறுத்திருப்பது குறிப்பிடத்தக்கது!
அரசியல் பின்னணி கொண்ட வழக்குகளைக் கையாள்வதில் சிபிஐ கொண்டிருக்கும் தடுமாற்றத்தை, இந்த வழக்கில் சிபிஐக்குக் கிடைத்திருக்கும் தோல்வி உணர்த்துகிறது. 2014-ல் இவ்வழக்கிலிருந்து அமித் ஷாவும், அதைத் தொடர்ந்து காவல் துறை உயரதிகாரி டி.ஜி.வன்ஸாராவும் விடுவிக்கப்பட்டது பாஜக தரப்புக்கு நிம்மதியையும் ஊக்கத்தையும் தந்தது. தற்போது சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழங்கியிருக்கும் இந்தத் தீர்ப்பு, குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பதவி வகித்த காலகட்டத்தில் நிகழ்ந்த என்கவுன்ட்டர்களை நியாயப்படுத்தும் வகையில் பேச பாஜக தரப்புக்கு வாய்ப்பை வழங்கியிருக்கிறது. இது தொடர்பாக, சர்ச்சைக்குரிய வகையில் டி.ஜி.வன்ஸாரா பதிவிட்ட ட்வீட்டுகள் கவனம் ஈர்த்தன. மோடியைப் பாதுகாக்க இதுபோன்ற முன்கூட்டியே நடத்தப்படும் என்கவுன்ட்டர்கள் தேவையாக இருந்தன என்று அவர் ட்விட்டரில் பதிவிட்டிருப்பது கவனிக்கத்தக்கது. ஒரு தலைவரின் உயிருக்கு ஆபத்து எனும் பெயரில், நீதிக்குப் புறம்பான கொலைகளை மேற்கொள்வதை நியாயப்படுத்தும் வகையிலான போக்கு இது. போலி என்கவுன்ட்டர் சம்பவங்கள் தொடர்பாக இப்படியான கருத்தாக்கங்கள் முன்வைக்கப்படும் சூழல் வருந்தத்தக்கது.