ஊழல் வழக்கில் ஜாமீன் பெற்ற பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், போராட்ட வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார். அவர் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவர் இப்போதைக்கு விடுதலையாக வாய்ப்பில்லை என தெரிகிறது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது ஊழல் வழக்கு உட்பட ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதனால் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். பாகிஸ்தான் தலைவர்களுக்கு வெளிநாட்டு தலைவர்கள் அளிக்கும் பரிசு எல்லாம் அரசு கருவூலத்துக்கு சென்று விடும். அவ்வாறு வழங்கப்பட்ட விலை உயர்ந்த ஆபரணம் ஒன்றை, இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது அரசு கருவூலத்துக்கு குறைந்த பணம் செலுத்தி முறைகேடான வழியில் எடுத்துக் கொண்டதாக ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் இம்ரான் கானுக்கு நேற்று முன்தினம் ஜாமீன் வழங்கியது.