
டெல்லி செங்கோட்டை அருகே அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் சாலையில் கார் ஒன்று திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது விபத்தா அல்லது சதிச் செயலா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து உடனடியாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வெடிப்புச் சம்பவம் விபத்துதானா அல்லது சதிச் செயலா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இதுகுறித்து பேசிய அதிகாரிகள், சாலையில் ஓடிக் கொண்டிருந்த காரில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தில் எந்த பள்ளமும் ஏற்படவில்லை. எனவே அது குண்டு வெடிப்பா என்று எங்களால் இப்போதைக்கு கூற முடியாது. மேலும், குண்டு வெடிப்பு நடக்கும் இடங்களில் பொதுவாகக் காணப்படும் பெல்லட் அல்லது சிதறல்களால் ஏற்பட்ட காயங்கள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

