
புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் நடந்த கார் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கார் வெடித்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13-ஆக உயர்ந்துள்ளது. மேலும் படுகாயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் இறந்த 5 ஆண்களைச் சேர்ந்த 5 குடும்பங்களின் எதிர்காலக் கனவுகள் கலைந்து போய்விட்டது. இறந்தவர்களில் பிஹாரை சேர்ந்த கார் டிரைவர் பங்கஜ் சைனியும்(22) ஒருவர். இவர் சாந்தினி சவுக் பகுதியில் ஒரு பயணியை இறக்கிவிட்டு வரும்போது இந்த குண்டுவெடிப்பில் சிக்கி உயிரிழந்தார். பங்கஜ் சைனியின் தந்தை இதுகுறித்து கூறும்போது, “பயணியை இறக்கிவிட்டு பங்கஜ் தனது காரில் வரும்போதுதான் இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது. எங்கள் குடும்பத்தின் ஒரே நம்பிக்கை பங்கஜ்தான். அவரை இழந்து எங்களால் இருக்கவே முடியாது. இந்த சம்பவத்துக்கு நீதி கிடைக்கவேண்டும்’’ என்றார்.

