டெல்லி: கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்ற அரசியல் தலைவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. அரசியல் சாசனப்படி இதை நாடாளுமன்றமே முடிவு செய்யும் என உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு வாதம் வைத்துள்ளது. தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கான தடை தொடர்பாக ஏற்கனவே உள்ள சட்டத்தை மாற்றி வாழ்நாள் தடை விதிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் தீபங்கர் தத்தா, மன்மோகன் அடங்கிய அமர்வில் கடந்த 10ம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது, இது அரசியல் சாசனப் பிரிவு சார்ந்த விவகாரம் என்பதால், இதில் ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்திற்கு உதவ வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர். அடுத்த மூன்று வாரத்தில் மத்திய அரசு மற்றும் தலைமை தேர்தல் கமிஷன், இந்த மனு மீது விரிவான பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர். இந்நிலையில், ஒன்றிய அரசு இந்த விவகாரத்தில் தன் நிலைப்பாட்டை பிரமாண பத்திரமாக இன்று தாக்கல் செய்தது.
அதில், தண்டனை பெற்ற அரசியல் தலைவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. அரசியல் சாசனப்படி இதை நாடாளுமன்றமே முடிவு செய்யும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 8-ன் படி, எம்.பி., எம்.எல்.ஏக்கள் தண்டனை பெற்றால் அவர்களுக்கு 6 ஆண்டுகள் தடை என்பதே பொருத்தமானதாக உள்ளது. வாழ்நாள் தடை மிக கடுமையாக இருக்கும். தற்போது உள்ள அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவு 102 மற்றும் 191 ஆகியவை, எம்.பி., – எம்.எல்.ஏ.,வை தகுதி நீக்கம் செய்வதற்கான அதிகாரங்களை பார்லிமென்டுக்கு வழங்கியுள்ளது. தேவைப்பட்டால் அதை நாங்கள் பயன்படுத்திக் கொள்வோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
The post தண்டனை பெற்ற அரசியல் தலைவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை: ஒன்றிய அரசு appeared first on Dinakaran.