தொட்டியம்: திருச்சி மாவட்டம், முசிறி அருகே தொட்டியம் போலீசார் மற்றும் நெடுஞ்சாலை போலீசார் ரோந்து பணியில் நேற்று ஈடுபட்டனர். அப்போது தொட்டியம் காவல் நிலையம் எதிரே பேருந்து நிறுத்ததில் சந்தேகத்திற்கு இடமான வகையில் கையில் இரண்டு பேக்குகளுடன் ஒருவர் நின்றிருந்தார். போலீசாரை பார்த்த உடன் அந்த வாலிபர் திருதிருவென்று முழித்தார். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். அவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்தது. உடனடியாக காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று சோதனையிட்டதில் அந்த பையில் ரூ.1 கோடியே 12 லட்சத்து 48 ஆயிரத்து 200 இருந்தது. அவர், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா கன்னிகா காவேரி தெருவை சேர்ந்த கோபிநாத் (52) என்பதும் டியூப் மற்றும் பிளைவூட் கடை நடத்தி வருவதும் தெரிய வந்தது.
இதுபற்றி திருச்சி வருமான வரித்துறையினருக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். இதை தொடர்ந்து திருச்சியில் இருந்து வருமானவரித்துறை அதிகாரிகள் வந்து கோபிநாத்தை பணத்துடன் திருச்சிக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் கணக்கில் வராத பணமா அல்லது ஹவாலா பணமா என்று வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
The post திருச்சி அருகே பஸ் நிலையத்தில் ரூ.1.12 கோடியுடன் சிக்கிய வியாபாரி: வருமான வரித்துறை விசாரணை appeared first on Dinakaran.