சென்னை: மணலி ஐஓசியில் இருந்து டீசல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் திருவள்ளூர் அருகே தடம் புரண்டு தீப்பற்றி எரிந்தது. இதில் 17 டேங்கர்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின. பல மணி நேரம் தீ கொளுந்துவிட்டு எரிந்ததால், அந்த வழியாகச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில்கள் உட்பட ரயில் போக்குவரத்து உட்பட சென்னை – அரக்கோணம் மார்க்கத்தில் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டன.
சென்னை மணலி ஐஓசியில் டீசல் நிரப்பிக் கொண்டு நிரப்பிய டேங்கர்களுடன் சரக்கு ரயில் ஒன்று மைசூருக்கு நேற்றுக் காலை புறப்பட்டது. இன்ஜின், கார்டு பெட்டியுடன் டீசல் நிரப்பிய 50 டேங்கர்கள் இணைக்கப்பட்டிருந்தன. அந்த ரயில் திருவள்ளூர் வழியாக மைசூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. நேற்று காலை 5.20 மணி அளவில் இந்த ரயில், திருவள்ளூர் ரயில் நிலையத்தை கடந்து திருவள்ளூர் மற்றும் ஏகாட்டுர் ரயில் நிலையங்களுக்கு இடையே செல்லும்போது, ரயிலின் ஒரு டேங்கர் தடம் புரண்டது.
பின்னர் அடுத்தடுத்த சில டேங்கர்களும் கவிழ்ந்தன. இதில் ஒரு டேங்கரில் இருந்த டீசலில் திடீரென தீப்பற்றியது. காற்றின் வேகம் காரணமாகவும், டீசல் என்பதாலும் அடுத்தடுத்த பெட்டிகளுக்கும் மளமளவெனப் பரவியது. இதன் காரணமாக அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இதனால் சுற்றுவட்டார மக்கள் மூச்சுத்திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டு அவதிப்பட்டனர். தீ விபத்து தகவலறிந்ததும், அம்பத்தூர், ஆவடி, கும்மிடிப்பூண்டி, திரூர், பேரம்பாக்கம், திருத்தணி மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 10 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது.
எனினும் 17 டேங்கர்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின. 18வது டேங்கரில் பரவுவதற்குள் தீ அணைக்கப்பட்டு மீட்கப்பட்டது. அந்த ஒரு டேங்கரில் இருந்த டீசல் வேறொரு வாகன டேங்கருக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையில் ரயில்வே தொழில்நுட்ப பிரிவினர் இணைப்புகளை கழற்றி மீதமிருந்து 32 டீசல் டேங்கர்களை இன்ஜினில் இணைத்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அந்த டேங்கர்கள் அனைத்தும் தீப்பிடிக்காமல் தப்பின.
மேலும் தீ விபத்து காரணமாக ரயில்கள் இயக்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த மின்சார கேபிள்கள் தண்டவாளத்தில் அறுந்து விழுந்தன. சென்னையில் இருந்து ரயில்வே பொறியாளர்கள் நேரில் வந்து, மின் கம்பிகள் அறுந்து விழுந்த பகுதியில் ஆய்வுப்பணி மேற்கொண்டனர். இதனிடையே, தீ விபத்தை அறிந்ததும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மு.பிரதாப், ரயில்வே போலீஸ் ஐஜி ஏ.ஜி.பாபு, மாவட்ட போலீஸ் எஸ்பி ரா.சீனிவாச பெருமாள், திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.இராஜேந்திரன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு மீட்பு பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.
இந்த விபத்துக் காரணமாக அந்த வழியாகச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில்கள், மின்சார ரயில்கள் உட்பட சென்னை அரக்ேகாணம் மார்க்கத்தில் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களுக்கு தினமும் ஏராளமான எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இது தவிர சென்னையில் இருந்து திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி மார்கமாக மின்சார ரயில்கள் சென்று வருகின்றன. இவற்றை பல லட்சம் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு, தனியார் கம்பெனி ஊழியர்கள், வியாபாரிகள் என பல தரப்பினரும் பயன்படுத்தி வருகின்றனர்.
* ரூ.12 கோடி இழப்பு
தீ விபத்தில் 17 டேங்கர்களில் இருந்த டீசல் முற்றிலும் நாசமானது. மொத்தம் சுமார் 12 கோடி ரூபாய் மதிப்பிலான டீசல் எரிந்து விட்டதாக தீயணைப்பு துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
* விபத்துக்கு காரணம் என்ன?
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் கூறுகையில், ‘‘சரக்கு ரயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டதே இந்த தீ விபத்துக்கான காரணம். தீ விபத்து நடந்த பகுதியை சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். விபத்து இடத்தின் அருகே பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம். மீட்புக் பணிகள் அனைத்தும் வேகமாக நடைபெற்று வருகிறது. பயணிகள் சிரமமின்றி செல்வதற்கு அரக்கோணம், திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தால் உயிரிழப்பு ஏதும் நிகழவில்லை. மக்கள் பயப்பட தேவையில்லை,’’ என்றார்.
* எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து இன்று சீராகுமா?
தீ விபத்து காரணமாக சென்னையில் நேற்று காலை முதல் இரவு வரை அரக்கோணம் மார்க்கமாக செல்ல வேண்டிய அனைத்து பயணிகள் ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. இதேபோல் அரக்கோணம் மார்க்கத்தில் வந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள், மின்சார ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இன்று ரயில் போக்குவரத்து முற்றிலும் சீராகுமா என எதிர்பார்க்கப்படுகிறது.
* சரக்கு ரயில்களால் நிகழ்ந்த விபத்துகள்
பயணிகள் ரயில்களைப் போல சரக்கு ரயில்கள் பெரும்பாலும் விபத்தில் சிக்குவதில்லை. இருப்பினும், சரக்கு ரயில்கள் மோதி சில விபத்துகள் நடந்திருக்கின்றன. அவற்றின் விவரம் வருமாறு: கடந்த 2023ம் ஆண்டு ஒடிசாவில் பாலசோர் மாவட்டம் பகநாகா பஜார் ரயில் நிலையம் அருகே பாசஞ்சர் ரயிலும் ஷாலிமார் சென்னை கோரமண்டல் ரயிலும் ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே வந்து மோதியதில் 290க்கும் மேற்பட்ட பயணிகள் பலியாகினர். சிக்னல் கோளாறு இதற்கு காரணம் என கூறப்பட்டது.
* கடந்த 2024ம் ஆண்டு ஜூன் 17ம் தேதி சரக்கு ரயில் ஒன்று கச்சே குடா எக்ஸ்பிரஸ் ரயிலுடன் மோதி விபத்து நேர்ந்தது. மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் ஜல்பைகுரி ரயில் நிலையம் அருகே இந்த சம்பவம் நிகழ்ந்தது. இதில் 10 பேர் இறந்தனர். அதன் பிறகுதான் ரயில்கள் மோதி விபத்து நேர்வதை தடுக்க கவச் அமைப்பை அனைத்து ரயில்களிலும் பொருத்தி நடவடிக்கை எடுக்க முனைப்பு காட்டப்பட்டது.
* கடந்த பிப்ரவரி மாதம் உத்தரபிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் பாம்பிபூர் அருகே சுஜாத்பூர் மற்றும் ருசலாபாத் ரயில் நிலையங்களுக்கு இடையே இரண்டு சரக்கு ரயில்கள் எதிரெதிரே ஒரே தண்டவாளத்தில் வந்தபோது மோதிக் கொண்டன. ஒரு சரக்கு ரயிலின் டிரைவர் சிவப்பு சிக்னலை மீறி இயக்கியதால் இந்த விபத்து நேர்ந்ததாக கூறப்பட்டது.
The post திருவள்ளூர் அருகே அதிகாலையில் தடம் புரண்டு சரக்கு ரயிலில் பயங்கர தீ விபத்து: 17 டீசல் டேங்கர் எரிந்து நாசம் : சென்னை – அரக்கோணம் மார்க்கத்தில் அனைத்து ரயில்களும் ரத்து appeared first on Dinakaran.