* விவசாயிகள் வங்கி கணக்கில் ₹121 கோடி வரவு
திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஓரு மாத காலத்தில் 50 ஆயிரம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 6ஆயிரத்து 736 விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ 121 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளதாக நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் புஹாரி தெரிவித்துள்ளார்.தமிழகத்தின் உணவு உற்பத்தியில் டெல்டா மாவட்டங்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. இதில் குறிப்பாக நெல் உற்பத்தியானது 90 சதவிகித அளவில் நடைபெற்று வருகிறது.
இதனையொட்டி, திருவாரூர் மாவட்டத்தில் குறுவை மற்றும் சம்பா என ஆண்டுஒன்றுக்கு மொத்தம் 5 லட்சம் ஏக்கரில் சாகுபடி பணியினை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கையின் பேரில் டெல்டா மாவட்டங்களில் மேட்டூர் அணையிலிருந்து உரிய நேரத்தில் நீர் திறப்பு, ஆறுகள் மற்றும் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டது, குறுவை தொகுப்பு திட்டம், பயிர் கடன்கள் வழங்கியது, விவசாயத்திற்கு தேவையான விதை மற்றும் உரங்கள் உரிய நேரத்தில் வழங்கப்பட்டது போன்றவற்றின் காரணமாக வழக்கத்தை விட கூடுதலான பரப்பளவில் சாகுபடியினை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2023&24 காரீப் பருவத்திற்காக மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 38 ஆயிரத்து 596 விவசாயிகளிடமிருந்து ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 739 மெ.டன் அளவில் குறுவை நெல் கொள்முதல் செய்யப்பட்டு இதற்காக விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ 337 கோடியே 64 லட்சத்து 45 ஆயிரத்து 988 வரவு வைக்கப்பட்டது.
இந்நிலையில் மேட்டூர் அணைக்கு உரிய நீர் வரத்து இல்லாமல் கடந்த ஜுன் 12ந் தேதி அணை திறக்க முடியாமல் போன நிலையிலும் போர்வெல்களை கொண்டு குறுவை சாகுபடியினை விவசாயிகள் மேற்கொண்ட நிலையில் பின்னர் ஜுலை மாதம் இறுதியில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை நிரம்பியதையடுத்து மேட்டூர் அணையும் அதன் பின்னர் கல்லணையும் திறக்கப்பட்ட நிலையில் இந்த நீரினை விவசாயிகள் தங்களது குறுவை சாகுபடிக்கு பயன்படுத்தி கொண்டதுடன் அரசு சார்பில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் மூலம் விதைகள், உரங்கள் மற்றும் இடுபொருள்கள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டன.
இதனையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடியினை விவசாயிகள் மேற்கொண்டனர். மேலும் குறுவை சாகுபடி நெல் அறுவடையின் போது அரசு கொள்முதல் நிலையங்கள் வழக்கமாக அக்டோபர் 1ந் தேதி திறக்கப்பட்டு வந்த நிலையில் மழையில் நெல்கள் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று முதல்வர் மு. க ஸ்டாலின் மூலம் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தியதன் காரணமாக செப்டம்பர் 1ந் தேதி அரசு கொள்முதல் நிலையங்களை திறந்து கொள்வதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியதையடுத்து வரலாற்றிலேயே இல்லாத வகையில் கடந்த 2023ம் ஆண்டு முதல் செப்டம்பர் 1ந் தேதி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் பணி நடைபெற்று வருகிறது.
இதனையொட்டி நடப்பு காரீப் (2024&25) பருவத்திற்காக கடந்த செப்டம்பர் 1ந் தேதி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்ட நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் 172 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 86 ஆயிரத்து 822 மெ.டென் குறுவை நெல் கொள்முதல் செய்யப்பட்டு இதற்குரிய தொகை ரூ.210 கோடியானது 19 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
அதன்பின்னர் சம்பா அறுவடை நெல் கொள்முதலுக்காக தற்போது மாவட்டம் முழுவதும் 532 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கடந்த ஓரு மாத காலத்தில் 50 ஆயிரம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 6ஆயிரத்து 736 விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ 121 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளதாக நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலளளர் புஹாரி தெரிவித்துள்ளார்.
The post திருவாரூர் மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 50 ஆயிரம் மெ.டன் நெல் கொள்முதல் appeared first on Dinakaran.