
சென்னை: தீபாவளி பண்டிகை இன்று நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. புத்தாடை அணிந்து பட்டாசுகளை வெடித்து இனிப்பு வழங்கி வீடுதோறும் தீபம் ஏற்றி வைத்து பண்டிகையை மக்கள் கொண்டாடினர். இதை முன்னிட்டு சென்னையில் ஜவுளி, பட்டாசு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களின் விற்பனை அமோகமாக நடந்தது.
தீபாவளி பண்டிகை என்றாலே, துணிக்கடைகள் அதிகம் உள்ள சென்னையின் முக்கிய கடை வீதிகளில் கூட்ட நெரிசல் இயல்பாகவே அதிகரித்து விடும். அந்தவகையில், தீபாவளிக்கு முந்தைய நாளான நேற்று, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகளில் காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது. மழை விட்டு விட்டு பெய்து வந்த நிலையிலும், நேற்று விடுமுறை நாள் என்பதால் மக்கள் தங்களது குடும்பத்தினருடன் ஜவுளி கடைகள், பட்டாசு கடைகளை நோக்கி படையெடுத்தனர்.

