
நாடு முழுவதும், தெருநாய்ப் பிரச்சினை அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், பொது இடங்களில் திரியும் தெருநாய்களுக்கு வெறிநோய் (ரேபிஸ்) தடுப்பூசி செலுத்தி, கருத்தடை செய்து, காப்பகங்களில் அடைக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். இதுதொடர்பாகத் தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் பதிவுசெய்த வழக்கில், நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி.அஞ்சாரியா அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.
ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் விலங்குகளால் ஏற்படும் மனித மரணங்களில் 90% தெருநாய்கள், வளர்ப்புநாய்கள் கடித்து ரேபிஸ் ஏற்படுவதால் நிகழ்வதாக உலகச் சுகாதார நிறுவனமும் இந்திய நோய்க் கட்டுப்பாட்டு மையமும் கூறுகின்றன. அதைச் சுட்டிக்காட்டியுள்ள உச்ச நீதிமன்றம், நாட்டின் பல பகுதிகளில் மக்கள் ஆபத்தை எதிர்கொண்டிருப்பதாகக் கூறியிருக்கிறது. கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், விளையாட்டு வளாகங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், இதர அரசுத் துறை கட்டிடங்களில் இருந்து தெருநாய்கள் அகற்றப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறது.

