* ஹவாலா தரகர் மூலம் பணத்தை கைமாற்றிய பாஜ நிர்வாகிகள், ‘கால் டேட்டா’ மூலம் சிக்கினர், சிபிசிஐடி பரபரப்பு தகவல்
சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய ஹவாலா தரகர் சூரஜ் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பாஜ நிர்வாகிகளான எஸ்.ஆர்.சேகர், கேசவ விநாயகம், கோவர்தன் ஆகியோர் தங்க கட்டிகள் கொடுத்து உதவியதும் ‘கால் டேட்டா ரெக்கார்டு’ மூலம் உறுதியாகியுள்ளதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது மார்ச் 26ம் ேததி தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் கொண்டு சென்ற ரூ.4 கோடி ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பணத்துடன் பிடிபட்ட பாஜ எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் ஓட்டல் மேலாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அப்போது 3 பேரும், ரூ.4 கோடி பணம் நெல்லை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என வாக்குமூலம் அளித்தனர்.
இதை தொடர்ந்து, சிபிசிஐடி போலீசார் நயினார் நாகேந்திரனின் ஓட்டல் மேலாளர் சதீஷ், அவரது சகோதரர் நவீன் மற்றும் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் பெருமாள், நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன், முருகனிடம் பணியாற்றும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் மற்றும் பாஜ தொழிற்துறை மாநில தலைவர் கோவர்தனின் மகன்கள் பாலாஜி, கிஷோர் மற்றும் பாஜ மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், பாஜ மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் உள்பட 15 பேரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.
இந்த வழக்கில் திடீரென ஈரோடு பகுதியை சேர்ந்த ரயில்வே கேண்டீன் உரிமையாளர் முஸ்தபா என்பவர் ரூ.4 கோடி பணம் தன்னுடையது என்று உரிமை கோரினார். பிறகு முஸ்தபாவின் வங்கி கணக்குகள், ரயில்வே கேண்டீன் வங்கி கணக்குகள் தொடர்பான விவரங்களை பெற்று சிபிசிஐடி ஆய்வு செய்த போது, ரூ.4 கோடி பணம் தொடர்பாக எந்த பரிமாற்றமும் நடைபெறவில்லை என உறுதியானது. அதை தொடர்ந்து, சிபிசிஐடி போலீசார் இரண்டாவது முறையாக பாஜ மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகத்திடம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
அதில், கேசவ விநாயம் அளித்த தகவலின்படி, இந்த வழக்கில் புதுச்சேரி மாநில தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான செல்வகணபதி மற்றும் சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த தொழிலதிபர் பங்கஜ் லால்வானி மற்றும் என்எஸ்சி போஸ் சாலையை சேர்ந்த ஹவாலா தரகர் சூரஜ் ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். 11 மணி நேரம் நடந்த விசாரணையில், ஹவாலா இடைத்தரகர் சூரஜுக்கு நேரடியாக ரூ.4 கோடி பணத்தில் தொடர்பு இருந்தது தெரியவந்தது. அவரிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அதில், ஹவாலா தரகர் சூரஜை புதுச்சேரி மாநிலங்களவை பாஜ எம்பி செல்வகணபதி, நேரடியாக தொடர்பு கொண்டு தன்னிடம் 20 கிலோ தங்க கட்டிகள் இருப்பதாகவும், அதை விற்று பணமாக கொடுக்கும்படியும் கூறியுள்ளார். அதன்படி, ஹாவாலா தரகர் சூரஜ், எம்பி செல்வகணபதியிடம் 15 கிலோ தங்க கட்டிகளை வாங்கி அதை சென்னை சவுகார்பேட்டை, என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள நகைக்கடைகளில் விற்று பணத்தை கொடுத்தாகவும், மீதமுள்ள 5 கிலோ தங்க கட்டிகளை எம்பி செல்வகணபதி புதுச்சேரியிலேயே விற்பனை செய்து விட்டதாக சூரஜ் வாக்குமூலம் அளித்து இருந்தார்.
அதை உறுதி செய்ய சிபிசிஐடி போலீசார் சூரஜ் தொடர்பு எண்களை ஆய்வு செய்தனர். அப்போது, பாஜ நிர்வாகி கோவர்தன், எஸ்.ஆர்.சேகர், கேசவ விநாயகம் ஆகியோர் பேசியது தெரியவந்தது. அதில், ஒன்றரை கிலோ தங்கம் விற்பனை செய்யப்பட்ட ரூ.97.92 லட்சம் பணத்தை பாஜ நிர்வாகி கோவர்தனின் கார் டிரைவர் விக்னேஷை, ஹவாலா தரகர் சூரஜ் செல்போனில் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி வழங்கியது உறுதியானது.
இதுபோல் 15 கிலோ தங்கத்தை விற்பனை செய்த பணத்தை பாஜ நிர்வாகிகளிடம் ஹவாலா தரகர் சூரஜ் தொடர்பு கொண்டு பேசி பணத்தை வழங்கியதும் ‘கால் டேட்டா ரெக்கார்ட்’ மூலம் உறுதியானது. இதனால் தன்னை சிபிசிஐடி போலீசார் கைது செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் ஹவாலா தரகர் சூரஜ் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணையின் போது, சிபிசிஐடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்க கட்டிகள் விற்பனை செய்து பாஜ நிர்வாகிகளுக்கு சூரஜ் பணம் கொடுத்ததற்கான ஆதாரங்கள் உள்ளன என்று தெரிவித்தார்.
இதை தொடர்ந்து முன்ஜாமீன் மனு மீதான வழக்கு விசாரணையை நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ரூ.4 கோடி பணம் யாருக்கு சொந்தம் என தெரியாத நிலையில் இருந்தது. ஆனால் சிபிசிஐடி நடத்திய தீவிர விசாரணையில் தாம்பரம் ரயில் நிலையத்தில் சிக்கிய ரூ.4 கோடி பணம் நயினார் நாகேந்திரனுக்கு கொண்டு செல்லப்பட்டது என தெரியவந்துள்ளது. இதையடுத்து ரூ.4 கோடி பணம் வழக்கில் கால் டேட்டா ரெக்கார்டு மூலம் உறுதியாகி உள்ளதால், பாஜ முக்கிய நிர்வாகிகள் பலர் கலக்கத்தில் உள்ளனர்.
* ஹவாலா தரகருக்கு ஜாமீன்
நயினார் நாகேந்திரனுக்காக ஹவாலா பணத்தை ஏற்பாடு செய்ததாக கூறி தரகர் சூரஜை சிபிஐசிடி போலீசார் கைது செய்தனர். சிறையில் இருந்த அவர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி கார்த்திகேயன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சூரஜை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தது. எனவே, அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரர் சூரஜ் மீது ஜாமீனில் வெளிவரக்கூடிய பிரிவின் கீழ்தன் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார். பின்னர், அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
The post நாடாளுமன்ற தேர்தலின்போது ரயிலில் ரூ.4 கோடி சிக்கிய விவகாரம் நயினாருக்காக பணப்பட்டுவாடா செய்ய 20 கிலோ தங்க கட்டிகள் விற்றது அம்பலம் appeared first on Dinakaran.