சென்னை: நாட்டுப்புற கலை பயிற்சி மையங்களில் நாளை முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; நாட்டுப்புறக் கலைகளைப் பாதுகாக்கவும், இளைய தலைமுறையினரிடையே நாட்டுப்புறக் கலைகளை கொண்டு சேர்க்கவும், என அரசின் அறிவிப்பு திட்டத்தினை செயல்படுத்திடும் பொருட்டு, சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருவையாறு அரசு இசைக்கல்லூரிகளிலும், சென்னை, கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரிகளிலும், மாமல்லபுரம் அரசினர் கட்டட மற்றும் சிற்பக் கலைக் கல்லூரியிலும், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர், சீர்காழி, திருவாரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, பெரம்பலூர், கரூர், இராமநாதபுரம், சிவகங்கை, ஈரோடு, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் செயல்படும் மாவட்ட அரசு இசைப்பள்ளிகளிலும் மற்றும் தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டு மையம் ஆகிய 25 இடங்களில் 2024-2025 ஆம் கல்வியாண்டு முதல் பகுதிநேர நாட்டுப்புறக் கலைப்பயிற்சி மையங்கள் தோற்றுவிக்கப்பட்டு,
கரகம், தப்பாட்டம், மரக்கால் ஆட்டம், சிலம்பாட்டம், கும்மி, துடும்பாட்டம், காவடியாட்டம், ஜிக்காட்டம், இசை நாடகம், பேண்ட் இசை, தோற்பாவைக்கூத்து, தெருக்கூத்து, புலியாட்டம், கைச்சிலம்பாட்டம், பெரிய மேளம், பம்பை, கிராமியப் பாட்டு, புரவியாட்டம், கோல்கால் ஆட்டம், மல்லர் கம்பம், நைண்டி மேள தவில், நாதஸ்வரம், வில்லுப்பாட்டு, பொம்மலாட்டம், சாமியாட்டம், கோலாட்டம், வள்ளிக்கும்மி, தேவராட்டம், ஒயிலாட்டம், கணியான் கூத்து ஆகிய கலைகளில் ஒவ்வொரு இடத்திலும் நான்கு வகையான கலைகளில் ஓராண்டு சான்றிதழ் பயிற்சியாக வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை நாட்டுப்புறக் கலைப் பயிற்சிகள் நடைபெறுகிறது. தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக் கழகத்தின் இசைவு பெற்று இப்பயிற்சிகள் நடத்தப்படுகிறது.
அவ்வகையில் 2025-2026 ஆம் கல்வியாண்டில் பகுதி நேர நாட்டுப்புறக் கலைப்பயிற்சி மையங்களில் மாணவர் சேர்க்கை நாளை முதல் நடைபெறவுள்ளது. 17 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் / தவறியவர்கள் இப்பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள். நாட்டுப்புறக் கலையில் ஆர்வமிக்க கல்லூரி மாணவர்கள் / இளைஞர்கள் / பணிக்கு செல்பவர்கள் /இல்லத்தரசிகள் ஆகியோர் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு, தமிழ்நாட்டின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளில் பயிற்சி பெறலாம். இப்பயிற்சி குறித்த விவரங்களையும், பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பத்தினையும் கலை பண்பாட்டுத்துறையின் இணையதளத்தில் (www.artandculture.tn.gov.in) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post நாட்டுப்புற கலை பயிற்சி மையங்களில் நாளை முதல் மாணவர் சேர்க்கை appeared first on Dinakaran.