பள்ளிபாளையம்: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொழிலாளர்களின் ஏழ்மை நிலையை பயன்படுத்தி, கிட்னி கொடுத்தால் 5 லட்சம் ரூபாய் வரை கொடுப்பதாக ஆசை காட்டி புரோக்கர்கள் அழைத்துச் செல்வதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் ராஜ்மோகன் நேற்று முன்தினம் நேரில் விசாரணை நடத்தினார்.
நேற்று 2வது நாளாக மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் ராஜ்மோகன், பள்ளிபாளையம் பகுதியில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், தொழிலாளர்களிடம் பணஆசையை தூண்டி கிட்னியை பெறுவதாக சமூக வலைதளங்களில் எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக இரண்டு நாட்களாக பள்ளிபாளையம் ஆவாரங்காடு, அன்னை சத்யாநகர், அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் சிறுநீரகம் தானம் செய்தவர்களிடம் நேரில் விசாரிக்கப்பட்டது. விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொழிலாளர்களை தூண்டி கிட்னி கொடுக்க மருத்துவமனைகளுக்கு அழைத்துச்சென்றதாக கூறப்படும் புரோக்கர்களை தேடி வருகிறோம் என்றார். அரசு மருத்துவர் வீரமணி பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் நேற்று அளித்த புகாரில், பெண்களை ஏமாற்றி கிட்னி பறித்ததாக சமூக வலைதளங்களில் புகார் கிளம்பியுள்ளது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியுள்ளார். இதனால் போலீசாரும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், பள்ளிபாளையம் ஆவாரங்காடு பகுதியை சேர்ந்த விசைத்தறி பெண் தொழிலாளி ஒருவர் கூறுகையில், குடும்பத் தேவைக்காக மகளிர் குழுக்களில் கடன் வாங்கினோம். வாழ்க்கை நடத்துவதற்கான வருமானம் போதாததால் குழுக்கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. அக்கம் பக்கத்தினரிடம் கடன் வாங்கி குழுக்கடனை செலுத்தினோம். கடன் சுமை அதிகமாகி விட்டதால் வேறு வழி தெரியவில்லை. இதனால் கிட்னியை விற்றேன். இதற்காக 4 லட்சம் கொடுத்தார்கள். அதை பெற்று வாங்கிய கடனை திரும்ப செலுத்தியுள்ளேன். எனது கணவரும் கிட்னி கொடுத்துள்ளார் என்றார்.
* இயக்குனர் தலைமையில் விசாரணை அமைச்சர் உத்தரவு
கிட்னி தொடர்பாக தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் வினீத் தீர விசாரித்து அறிக்கையை அரசுக்கு இரண்டு வாரத்திற்குள் அளிக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
The post நாமக்கலில் 2வது நாளாக அதிகாரிகள் விசாரணை ரூ.4 லட்சத்துக்கு கிட்னியை விற்றேன்: பெண் அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.